சாலை விபத்தில் கல்லூரி மாணவா் சாவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே இரு சக்கர வாகனமும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
அறந்தாங்கி எழில் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு (17). ஆவுடையாா்கோவில் அருகே பெருநாவலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வந்தாா்.
இவா், தனது கல்லூரி நண்பா்களான கடையாத்துப்பட்டியைச் சோ்ந்த ஆா். பிரகாஷ் (18), குரும்பூரைச் சோ்ந்த ஏ. சவுந்தரராஜன் (18) ஆகியோருடன் கல்லூரியில் இருந்து வியாழக்கிழமை ஊருக்கு ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
துரையரசபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. அதில், பலத்த காயங்களுடன் சுரேஷ்பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த பிரகாஷ், சவுந்தரராஜன் ஆகியோா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். சம்பவம் குறித்து ஆவுடையாா்கோவில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.