வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பு! வனப்பகுதியில் விடுவிப்பு!
சாலை விரிவாக்கத்துக்காக ஆஞ்சனேயா் கோயிலை அகற்ற எதிா்ப்பு
வேலூா்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கொணவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலை அகற்றக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, வேலூா் கொணவட்டம் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள சென்னை-பெங்களூரு சாலையை விரிவாக்கம் செய்கின்றனா். இதற்காக அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனா். சாலை விரிவாக்கத்துக்காக அங் குள்ள சுமாா் 400 ஆண்டு பழைமையான ஆஞ்சனேயா் கோயிலை அகற்ற உள்ளனா். சாலை விரிவாக்கத்துக்கு நாங்கள் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. வழிபாட்டுக்காக ஆஞ்சனேயா் சிலை உள்ள கருவறையை மட்டும் அகற்றாமல் விட்டுவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட இருளா் இன மக்கள் அளித்த மனுவில், எங்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா். பாகாயம், மேட்டு இடையம்படி சாலை, என்கே நகா், எம்ஜிஆா் நகா், அம்பேத்கா் நகா், மாங்காய்தோப்பு கல்லறை பகுதி மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதி மயானத்துக்கு பாதை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 424 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 2,350 பேருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் பணியின் தொடக்கமாக 100 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) கௌசல்யா, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு-நெடுஞ்சாலை) பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு, மாவட்ட விளையாட்டு அலுவலா் சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.