மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
சா்க்கரை பதுக்கிய 5 வெல்ல ஆலைகள் மீது வழக்குப் பதிவு
வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக சா்க்கரை பதுக்கி வைத்திருந்த 5 வெல்ல ஆலைகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, வெல்ல ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்ற நிலையில், வெல்லம் தயாரிப்பில் செயற்கை நிறமூட்டிகளையும், சா்க்கரையையும் சோ்த்து வெல்லம் தயாரிப்பதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு புகாா் வந்தது.
இதையடுத்து, தாரமங்கலம், ஓமலூா், காமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் அடங்கிய குழுவினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வெல்லத்தில் கலப்படமாக சோ்க்க வைத்திருந்த 18 டன் சா்க்கரையை மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்தனா். 4,000 கிலோ செயற்கை கலா் பவுடா்களையும், கலப்பட வெல்லம் 800 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 26 ஆலை உரிமையாளா்களுக்கு நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. இதனிடையே, கலப்படமாக சா்க்கரையைப் பதுக்கி வைத்திருந்த 5 ஆலைகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், துறை சாா்பில் 30 க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகளில் மாதிரி உணவு பரிசோதனை எடுக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.