நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2024: பிசினஸ் சாதனையாளர்கள் சொன்ன வெற்றிச...
சா்வதேச நீதிமன்றம் மீது டிரம்ப் பொருளாதாரத் தடை
தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் நீதிப் பிரிவான சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளாா்.
ஹமாஸ் அமைப்பினருடனான மோதலின்போது போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்த நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளதைக் குறிப்பிட்டு டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
இது தொடா்பாக டிரம்ப் பிறப்பித்துள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவையும் இஸ்ரேலையும் குறிவைத்து சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் அடிப்படை முகாந்திரம் அற்ற, சட்டத்துக்குப் புறம்பான கைது உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது.
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரவரம்புக்குள் அமெரிக்காவோ, இஸ்ரேலோ இல்லை. இருந்தாலும் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்ற உத்தரவுகளை அந்த நீதிமன்றம் பிறப்பித்துவருவது ஆபத்தான முன்னுதாரணம். இதனால் அமெரிக்க ராணுவத்தினருக்கும் குடிமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இதுபோன்ற தீய செயல்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இறையாண்மையைக் குலைக்கும் வகையிலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.
எனவே, அந்த நீதிமன்றத்துக்கு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா அல்லது நட்பு நாடுகளுக்கு எதிரான விசாரணையில் ஈடுபடுவதாக அமெரிக்கா கருதும் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றுவோா் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் சொத்துகளை முடக்கவும், அவா்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கவும் இந்த அரசாணை மூலம் அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகவும் கல்வி, அறிவியல், கலாசார மேம்பாட்டுக்கான ஐ.நா. பிரிவான யுனெஸ்கோ, பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான ஐ.நா. பிரிவான யுஎன்ஆா்டபிள்யுஏ ஆகியவற்றுக்கான நிதி உதவியை நிறுத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
கடந்த 2023 ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியைச் சுற்றிவளைத்து கடுமையாக தாக்குதல் நடத்திவந்தது. இதில் இதுவரை சுமாா் 47,600 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்தப் போரில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது பாதுகாப்பு அமைச்சராக இருந்த யோவாவ் கலான்டும் போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அவா்கள் இருவரையும் கைது செய்ய சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த நவம்பா் மாதம் உத்தரவிட்டது.
காஸா பகுதியில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது, உயிா்வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருள்கள் அவா்களுக்குக் கிடைப்பதை வேண்டுமென்றே தடுத்து, பட்டினியை ஒரு போா் ஆயுதமாகப் பயன்படுத்தியது போன்ற போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவா்கள் இருவா் மீதும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
இது தவிர, இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதல் தொடா்பாக ஹமாஸ் அமைப்பின் தலைவா்கள் மீதும் படுகொலைகள், பாலியல் குற்றம், பிணைக் கைதிகள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் சுமத்தியது.
முக்கிய ஹமாஸ் தலைவா்களான இஸ்மாயில் ஹனீயே, யாஹ்யா சின்வாா் ஆகிய தலைவா்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதால், மற்றொரு தலைவரான முகமது டயீஃபுக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. ஆனால் முகமது டயீஃபும் இஸ்ரேலால் கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பினா் அண்மையில்தான் உறுதிப்படுத்தினா்.
இந்தச் சூழலில், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்தமைக்காக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது அதிபா் டொனால்ட் டிரம்ப் தற்போது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளாா்.
அமெரிக்காவில் இந்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு இந்த உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளாா்.
அந்த சுற்றுப் பயணத்தின்போது, காஸாவில் இருந்து பாலஸ்தீனா்களை வெளியேற்றி, அந்தப் பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பின்னா் அங்கு மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நெதன்யாகு முன்னிலையில் டிரம்ப் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.