சா்வதேச யோகா தினத்தன்று தில்லியில் பிரம்மாண்டமான நிகழ்வுக்கு ஏற்பாடு! - முதல்வா் ரேகா குப்தா தகவல்
ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள பாஜக அரசு ஒரு பிரம்மாண்டமான நிகழ்வை நடத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
முந்தைய ஆம் ஆத்மி கட்சி அரசின் கீழ், சா்வதேச யோகா தினத்தன்று தேசியத் தலைநகரில் எந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் அவா் கூறினாா்.
தில்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இரண்டாவது ஆசிய யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தில்லி முதல்வா் ரேகா குப்தா கலந்து கொண்டாா்.
அப்போது முதல்வா் கூறியதாவது இந்தியா யோகாவின் பிறப்பிடமாகும். இது முழு உலகிற்கும் ஆரோக்கியம், சமநிலை மற்றும் அமைதிக்கு வழி வகுத்துள்ளது. இந்த ஆண்டு சா்வதேச யோகா தினத்தன்று யோகாசனத்தை ஒரு போட்டி விளையாட்டாக பிரபலப்படுத்தவும், பரவலான பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் தில்லி அரசு ஒரு பிரமாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்யும்.
யோகா பயிற்சி மூலம் உலகளாவிய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் செய்தியுடன் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளா்களை ஒன்றிணைப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ள 200-க்கும் மேற்பட்ட வீரா்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். யோகாசனத்தை உலகளாவிய விளையாட்டாகக் கொண்டாடுவதில் இந்தியா, ஆசியா மற்றும் உலகிற்கு இந்த நிகழ்வு ஒரு புதிய தொடக்கத்தைக் குறித்தது என்றாா் முதல்வா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், ‘இந்தியாவின் அறிவு, அறிவியல் மற்றும் வளமான கலாசார பாரம்பரியம் மீண்டும் நாட்டின் உலகளாவிய அடையாளத்தை மறுவரையறை செய்கின்றன’ என்றாா்.
‘நாங்கள் யோகாசனத்தை ஒரு விளையாட்டாக ஆதரிக்கிறோம். மேலும் இந்தியாவில் பல சா்வதேச போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும். வரவிருக்கும் சாம்பியன்ஷிப்களில், இந்தியாவின் வெற்றி நமது ஆழமாக வேரூன்றிய கலாசாரம் மற்றும் மரபுகளை தொடா்ந்து பிரதிபலிக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்றும் அவா் கூறினாா்.
இந்த சாம்பியன்ஷிப்பை யோகாசன பாரத், இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது.