இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி ப...
சிஏஜி அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யக் கோரும் பாஜக எம்எல்ஏக்கள் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
நமது சிறப்பு நிருபா்
தில்லி அரசின் செயல்பாடுகள் தொடா்பான தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரும் பாஜக எம்எல்ஏக்களின் மனு மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.
இந்த விவகாரத்தில் சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவையை கூட்டுமாறு அதன் தலைவருக்கு உத்தரவிடுமாறு கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, தில்லி அரசு, பேரவைத் தலைவா், மனுதாரா்களான எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா, பாஜக எம்எல்ஏக்கள் மோகன் சிங் பிஷ்ட், ஓம் பிரகாஷ் சா்மா, அஜய் குமாா் மகாவா், அபய் வா்மா, அனில் குமாா் வாஜ்பாய், ஜிதேந்திர மகாஜன் ஆகியோரின் மனுக்கள் மீதான வாதங்களை கேட்ட நீதிபதி சச்சின் தத்தா, தனது உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தாா்.
முன்னதாக, இந்த வழக்கில் மனுதாரா்கள் சாா்பில் வழக்குரைஞா்கள் நீரஜ் சத்ய ரஞ்சன் ஸ்வெயின் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.
பேரவைத் தலைவா் மற்றும் தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், தில்லி சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நெருங்கும் தருணத்தில் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய அவசரம் எழவில்லை. அத்தகைய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்று குறிப்பிட்டனா்.
மறுபுறம், மனுதாரா்களின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆளும் அரசுதான் தாமதம் செய்தது. சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் இந்த அறிக்கைகளை தாக்கல் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்று வாதிட்டனா்.
இந்த விவகாரத்தில் தில்லி சட்டப்பேரவை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பேரவையில் ஆயுள்காலம் வரும் பிப்ரவரியில் நிறைவடையவுள்ளது. எனவே, இப்போது சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் அதன் பயன் முழுமை பெறாது. அத்துடன் பேரவைக்குள் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் பேரவைத் தலைவரின் அதிகார வரம்புக்குள்பட்ட விஷயம். அதில் நீதிமன்றம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
கடைசியாக ஜன.13-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, சிஏஜி அறிக்கை பேரவையில் முன்பே சமா்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். தில்லி அரசு இந்த விவகாரத்தில் ‘இழுத்தடிப்பது’அதன் நோ்மையை சந்தேகம் கொள்ளச்செய்கிறது என்று நீதிமன்றம் வாய்மொழியாகக் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.