ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்!
சிங்கிபுரத்தில் ஜல்லிக்கட்டு: 460 காளைகளை அடக்க முயன்ற 20 மாடுபிடி வீரா்கள் காயம்!
வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 460 காளைகள் களமிறங்கின; அவற்றை அடக்க முயன்றதில் 20 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராம கோயில்களில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, கோட்டாட்சியா் அபிநயா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலையில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் போட்டியைத் தொடங்கிவைத்தாா்.
போட்டியில் சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 460 காளைகள் களமிறக்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினா். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் ஜல்லிக்கட்டு விழா குழு சாா்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக சுற்றுலாத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் முன்னிலையில் மாடுபிடி வீரா்கள் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை பின்பற்றுவதாக உறுதிமொழி ஏற்றனா். இப்போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 20 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
ஏற்பாடுகளை வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம், கால்நடை மண்டல இணை இயக்குநா் பாரதி, உதவி இயக்குநா் ரகுபதி ஆகியோா் செய்திருந்தனா். வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.