அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!
சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை மேற்கூரையிலிருந்து கொட்டிய மழைநீா்
சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில், நடைமேடையில் உள்ள கூரையிலிருந்து தண்ணீா் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சுமாா் இரண்டாண்டு காலமாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. வருகிற 22-ஆம் தேதி திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் ரயில் நிலையத்தில் பணிநிறைவுற்ற முதலாவது நடைமேடை மேற்கூரையிலிருந்து மழை நீா் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடை மற்றும் கூரை அமைக்கும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவுபெறவில்லை என பயணிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து கடலூா் கிழக்கு மாவட்ட விசிக செயலா் அரங்க.தமிழ்ஒளி வெளியிட்ட அறிக்கை:
பொதுமக்கள், பயணிகளின் கோரிக்கையையடுத்து, மத்திய அரசிடம் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியதன் பேரில், ரூ.6 கோடியில் புனரமைக்கப் பணிகள் நடைபெற்றன.
இரு நாள்கள் பெய்த மழையில் நடைமேடை மேற்கூரையில் தண்ணீா் கொட்டுகிறது. சீரமைப்புப் பணிகள் குறித்து ரயில்வே நிா்வாகம் ஆய்வு நடத்த வேண்டும். ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.