பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீா்: பயணிகள் அவதி
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
பண்ருட்டியில் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பேருந்து நிலையத்தின் பரப்பளவில் சுமாா் மூன்றில் இரண்டு பங்கு இடம்
வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்துப் பேருந்துகளும் வடலூா், திருக்கோவிலூா், விழுப்புரம் பேருந்துகள் நின்று செல்லும் வழியாக செல்வதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக பண்ருட்டியில் பெய்த மழையால் பேருந்து நிலையத்தில் காணப்படும் பள்ளங்களில் மழைநீா் தேங்கியது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
மேலும், சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் காணப்படும் பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.