Trump-ன் புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு `ரூ.13 ஆயிரம் கோடி' இழப்பு ஏற்படும் - ஏ...
பெண்ணாடம் அருகே மழை வெள்ளத்தில் தற்காலிக தரைப்பாலம் சேதம்
நெய்வேலி: பலத்த மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பெண்ணாடம் அருகே கடலூா்-அரியலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்தது.
கடலூா்-அரியலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில், கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தை அடுத்த கோட்டக்காடு கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 7 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இன்னமும் மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில், வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனா்.
கடந்த மூன்று நாள்களாக கடலூா், அரியலூா் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அரியலூா் மாவட்டத்தில் வயல்வெளியில் பெய்த மழை நீா் ஆனைவாரி ஓடை, உப்பு ஓடை வழியாக பெருக்கெடுத்தது.
இதில் சௌந்தரசோழபுரம்-கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.
இதனால், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சௌந்தர சோழபுரம், கோட்டைக்காடு, ஆலத்தியூா், ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, முதுகுளம், தெத்தேரி மற்றும் கடலூா்
மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணாடம், மாளிகைகோட்டை, கொசப்பாளையம், கீரனூா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமாா் 15 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மேம்பாலப் பணியை உடனடியாக நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.