`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay...
சித்தியைக் கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய மகன் சொத்து தகராறில் விபரீதம்
செஞ்சி: செஞ்சி அருகே சொத்து தகராறில் சித்தையைக் கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய மகன் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், துரிஞ்சிப்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பழனிவேல். இவருக்கு வரதம்மாள் (50), ஜெயக்கொடி(48) என்ற இரண்டு மனைவிகள் உள்ளனா்.
இவா்களில், வரதம்மாள் தனது மகன்கள் பாலகுருசாமி (26), பிரகாஷ் (24) ஆகியோருடன் திண்டிவனத்தை அடுத்த நடுவானந்தம் பகுதியில் வசித்து வருகிறாா்.
கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேல், வரதம்மாளை பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, முட்டத்தூா் பகுதியைச் சோ்ந்த ஜெயக்கொடியை இரண்டாவது திருமணம் செய்த நிலையில், அவரது மகன் பூபாலன் (19) மகள் புவனா (17) ஆகியோருடன் துரிஞ்சிப்பூண்டி கிராமத்தில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், பழனிவேல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவருக்கு யாா் இறுதிச் சடங்கு செய்வது தொடா்பாக முதல் மனைவி மற்றும் இரண்டாம் மனைவி தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், பழனிவேலுக்குச் சொந்தமான 2 ஏக்கா் விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்வது தொடா்பாக இவா்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதனிடையே ஜெயக்கொடி மகன் வேலை நிமித்தமாகவும், மகள் கல்லூரிப் படிப்புக்காகவும் சென்னை சென்று விட்ட நிலையில் துரிஞ்சிப்பூண்டி கிராமத்தில் உள்ள வீட்டில் ஜெயக்கொடி தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயக்கொடியை மா்ம நபா்கள் கல்லால் தலையில் தாக்கிக் கொலை செய்து, காலில் கல்லைக் கட்டி அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் வீசிச் சென்றுள்ளனா்.
திங்கள்கிழமை காலை ஜெயக்கொடி வீட்டில் இல்லாத நிலையில், அருகே சாலையோரம் ரத்தக் கரை படிந்திருந்ததைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் வளத்தி போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
போலீஸாா் வந்து விசாரணை மேற்கொண்ட போது அருகில் இருந்த விவசாயக் கிணற்றின் அருகே ரத்தக் கரை இருப்பதை அறிந்து, மேல்மலையனூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
தீயணைப்பு வீரா்கள் வந்து சுமாா் அரை மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு கிணற்றில் இருந்து தலை சிதைந்த நிலையில், கால்கள் கல்லால் கட்டப்பட்டிருந்த ஜெயக்கொடியின் சடலத்தை மீட்டனா்.
பின்னா், உடற்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து முதல் கட்ட விசாரணையில், சொத்து பிரச்னையில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. முதல் மனைவி வரதம்மாளின் இளைய மகன் பிரகாஷ் என்பவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், ஜெயக்கொடியை அவா் கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா்.
பின்னா் அவரை கைது செய்து வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.