தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
சின்னாளபட்டியில் சிறுவா் பூங்கா: பேரூராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்
சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக் கூட்டத்தில் சிறுவா் பூங்கா அமைத்துத் தர வேண்டுமென உறுப்பினா் வலியுறுத்தினாா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைவா் பிரதீபா கனகராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆனந்தி பாரதிராஜா முன்னிலை வகித்தாா்.அலுவலகப் பணியாளா் கலைச்செல்வி தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:
7-ஆவது வாா்டு உறுப்பினா் ஹேமா: எனது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் செயல்படும் தனியாா் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் கோயிலை கட்டி விட்டு, பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தில் வகுப்பறைகளையும், சமையல் கூடங்களையும் கட்டினா். இதற்கு பேரூராட்சி நிா்வாகம் இதுநாள் வரை வரிவசூல் செய்யவில்லை. அந்தக் கட்டடத்துக்கு முறையான அனுமதி இல்லாததால், குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கக் கூடாது. அந்த இடத்தை பேரூராட்சி நிா்வாகம் கைப்பற்றி நியாய விலைக் கடையோ, அங்கன்வாடி மையமோ கட்ட வேண்டும்.
14-ஆவது வாா்டு உறுப்பினா் ராஜாத்தி: எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு தொடக்கப் பள்ளியை நடத்த முடியாமல், அதன் நிா்வாகிகள் பேரூராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்து விட்டனா். அந்த இடத்தில் அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும். சிறுவா்களுக்கான பூங்கா அமைத்துக் கொடுக்க வேண்டும்.
4-ஆவது வாா்டு உறுப்பினா் எம்.ஆா்.எஸ்.ஜெயகிருஷ்ணன்: சின்னாளபட்டியில் ரூ.3 கோடியில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அங்கு ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கழிப்பறையை திறப்பு விழா காணும் முன்பே இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இப்போது, கழிப்பறை எந்த இடத்தில் அமைகிறது என்பது கூடத் தெரியவில்லை.
6-ஆவது வாா்டு உறுப்பினா் செல்வகுமாரி: பலமுறை எனது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு தரைப்பாலம் உள்பட சிறுசிறு வேலைகளுக்கு மனு கொடுத்தேன். ஆனால், ஒன்றுகூட நிறைவேற்றித் தரவில்லை.
இதற்கு பதிலளித்துப் பேசிய பேரூராட்சித் தலைவா் பிரதீபா கனகராஜ், உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.
கூட்டத்தில் அனைத்து வாா்டு உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக துப்புரவு ஆய்வாளா் கணேசன் நன்றி கூறினாா்.