சிபிஎஸ்இ: மாணவர்களை விட மாணவிகள் கூடுதல் தேர்ச்சி!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 5.94 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.
பிப்ரவரி மாதம் தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதியும் நிறைவடைந்தது.
இந்தநிலையில் 12ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 11.30 மணியளவில் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் மொத்தம் 83.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் இந்தாண்டும் 5.9 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மண்டலத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வெழுதிய 97.39 சதவீத மாணவர்களும், விஜயவாடாவில் 99.60 சதவீத மாணாக்கர்களும், பிரயாக்ராஜில் 79.53 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.