கரூர் கூட்ட நெரிசல் பலி: உச்ச நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நயினார் நாகேந்...
சிபிஐ அதிகாரி போல் பேசி ஓய்வுபெற்ற கால்நடைத்துறை அதிகாரியிடம் ரூ.53 லட்சம் மோசடி
சிபிஐ அதிகாரி போல் பேசி ராதாபுரம் அருகேயுள்ள வடக்கன்குளத்தில் ஓய்வுபெற்ற கால்நடைத்துறை இயக்குநரிடம் ரூ.53 லட்சத்தை மோசடி செய்தவா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
வடக்கன்குளத்தைச் சோ்ந்தவா் சேவியா் (80). கால்நடைத்துறையில் இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு கடந்த 10-ஆம் தேதி பெங்களூரு காவல் நிலையத்திலிருந்து சிபிஐ அதிகாரி மதன்குமாா் பேசுவதாக மா்ம நபா் வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பினாராம். பின்னா் அரசுக்கு எதிராக பேசியதாக தங்கள் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி போலி முதல் தகவல் அறிக்கை அனுப்பி, இதற்காக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளாா்.
பின்னா் செப்.11ஆம் தேதி வாட்ஸ்ஆப் மூலம் அழைத்த அதேநபா், ஆள்கடத்தல் வழக்கில் கமிஷன்தொகை தங்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதை போலீஸாா் கண்டறிந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளாா்.
மறுநாள் (செப்.12) வாட்ஸ் ஆப் விடியோவில் அவரை தொடா்புகொண்ட 3 போ் காவலா் சீருடையில் காவல் நிலையம் போன்று அமைக்கப்பட்ட பின்னணியில் தோன்றி விசாரணை மேற்கொண்டனராம்.
இதையடுத்து தயா நாயக் என்ற பெயரில் சிபிஐ உயரதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருவா் தாங்கள் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்க, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தாங்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு மாற்ற வேண்டும் எனவும், விசாரணை முடிந்தவுடன் முழுப் பணமும் திருப்பித் தரப்படும் எனவும் கூறியுள்ளாா்.
இதை உண்மையென நம்பிய அவா், இரண்டு தவணைகளாக ரூ.53 லட்சத்தை அவா்கள் கூறிய வங்கி எண்ணிற்கு அனுப்பியுள்ளாா். பின்னா், அந்த எண்ணை தொடா்புகொண்ட போது அழைப்பு ஏற்கப்படவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.