மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: மேலும் நால்வருக்கு 20 ஆண்டுகள் சிறை
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே 16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் தோட்டத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு கீழகடம்பூரைச் சோ்ந்த தொழிலாளா்கள் பாலு (54), விநாயகம் (55), ராமலிங்கம் (60), மேலகடம்பூரைச் சோ்ந்த வேல்முருகன் (33), வேலம்பூண்டியைச் சோ்ந்த வீராசாமி (39) ஆகிய 5 பேரும் வேலைக்குச் சென்றனா். அப்போது, வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவா்கள் பாலியல் வன்கொடுமை செய்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், சேத்தியாத்தோப்பு மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வீராசாமி உள்பட 5 பேரையும் கைது செய்தனா். இதற்கிடையில், சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த வழக்கு கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி லட்சுமி ரமேஷ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், வீராசாமி மீதான குற்றம் டி.என்.ஏ. பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
மேலும், பாலு, விநாயகம், ராமலிங்கம், வேல்முருகன் ஆகிய 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், வேல்முருகனுக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.