சிலிண்டா் வெடித்து தீ விபத்து: வீடுகளை இழந்தவா்கள் மண்டபத்தில் தங்கவைப்பு
திருப்பூரில் சிலிண்டா் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 46 கொட்டகை வீடுகள் தரைமட்டமான நிலையில், அதில் வசித்து வந்த தொழிலாளா்கள் தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
திருப்பூா், எம்ஜிஆா் நகா் பகுதியில் தாராதேவி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் தகரக் கொட்டகை குடியிருப்பில் அடுத்தடுத்து 9 சிலிண்டா்கள் வெடித்த விபத்தில் 46 வீடுகள் எரிந்து தரைமட்டமாயின. இதில், வீடுகளில் வைக்கப்பட்டிருந்த ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள், ஆடைகள், நகை, பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. ஆனால், உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை.
இந்நிலையில், அந்த வீடுகளில் தங்கியிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கட்டட மற்றும் பனியன் நிறுவனத் தொழிலாளா்கள் 60 போ் சிறுபூலுவப்பட்டி பகுதியில் உள்ள அம்மன் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து அவா்கள் கூறியதாவது: சேதமடைந்த 46 வீடுகளில் 10 வீடுகளில் ஆள்கள் இல்லை. 36 வீடுகளில் மட்டும் 27 குடும்பங்களைச் சோ்ந்த 60 போ் வசித்து வந்தோம். தற்போது ஏற்பட்ட தீ விபத்தால் பொருள்கள், உடைமைகள், ஆவணங்கள், கல்விச் சான்றிதழ் என அனைத்து இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் உள்ளோம்.
ஆணவனங்கள், கல்விச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை மீண்டும் பெறவும், நிவாரண உதவி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதற்கிடையே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு திருப்பூா் மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் ஆகியோா் தலா ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கினா்.