சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்வு; 23,345 புள்ளிகளை தொட்ட நிஃப்டி!
சிவகங்கையில் செவிலியா், மருந்தாளுநா் பயிற்சிக் கல்லூரிகள் அமைக்கக் கோரிக்கை
சிவகங்கையில் செவிலியா் பயிற்சிக் கல்லூரியும், மருந்தாளுநா் பயிற்சிக் கல்லூரியும் அமைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சி.எம். துரைஆனந்த் அனுப்பிய கோரிக்கை மனு:
சிவகங்கை நகராட்சியில் புதிதாக 100 கி.மீ. தொலைவுக்கு கழிவு நீா் கால்வாய்கள் அமைக்கவும், நகரின் மையப் பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த தெப்பக்குளத்தை பராமரிக்கவும், சிவகங்கை நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டவும் நிதி ஒதுக்க வேண்டும்.
நகரில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரு இடத்தில் வைத்து தரம் பிரித்து அப்புறப்படுத்த போதிய இட வசதி இல்லாததால் நகராட்சிக்கு மாற்று இடத்தில் 5 ஏக்கா் நிலம் ஒதுக்கித் தர வேண்டும். சிவகங்கை நகா் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்துக்கும், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும். சிவகங்கையில் செவிலியா் பயிற்சி கல்லூரியும், மருந்தாளுநா் பயிற்சி கல்லூரியும் அமைக்க வேண்டும். சிவகங்கை நகா் பகுதியில் மிகவும் பழைமையான நிலையில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத் தலைநகரான சிவகங்கையிலிருந்து பிற நகரங்களுக்குச் செல்ல இரவு 8 மணிக்கு மேல் பேருந்து வசதி இல்லை. எனவே அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் இரவு நேரங்களில் செல்லும் வகையில் பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட 16 கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்றாா் அவா்.