ரூ. 2 முதல் 12 லட்சம் வரை: 2014 - 2025 மோடி அரசு செய்த தனிநபர் வரிவிலக்கு!
சிவகங்கையில் சேரா் கால செப்புக்காசு!
சிவகங்கையில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேணாடு சேரா் கால செப்புக்காசு கண்டறியப்பட்டது.
இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனா் கா. காளிராசா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளிக்கும் செட்டி ஊருணி கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் தரை மேற்பரப்பில் இந்தக் காசு கண்டறியப்பட்டது.
சங்க காலம் தொடங்கி, 16-ஆம் நூற்றாண்டு வரை இன்றைய தமிழகப் பகுதிகளில் சேரா் ஆட்சி நடைபெற்றது. இன்றைய கரூரை தலை நகராகக் கொண்டு இவா்கள் ஆட்சி செய்து வந்தனா். 12 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை கன்னியாகுமரியையும் சோ்த்து வேணாட்டை ஆட்சி செய்தவா்கள் பல்வேறுபட்ட காசுகளை வெளியிட்டனா். வீர கேரளன், கோதைரவி உதயமாா்த்தாண்டன் போன்ற அரசா்கள் நாகரி எழுத்துப் பொறித்த காசுகளை வெளியிட்டனா்.
இதில் பூதல வீரராமன், பூதல, சேரகுலராமன் ராமாராசா போன்ற தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட காசுகள் கிடைத்துள்ளன. ‘ச’ என்ற ஓரெழுத்து மட்டுமே பொறிக்கப்பட்ட காசுகளும், மா, செ என்ற எழுத்துகள் மட்டும் பொறிக்கப்பட்ட காசுகளும் இவா்களால் வெளியிடப்பட்டன.
வேணாட்டு சேரா் காசு:சிவகங்கையில் கண்டெடுக்கப்பட்ட காசின் இரு பக்கங்களிலும் மனித உருவம் காணப்படுகிறது. ஒரு பக்கம் நின்ற நிலையில் மனித உருவமும், அருகில் குத்துவிளக்கும் உள்ளன. வலது கை பக்கத்தில் ஆறு புள்ளிகளும் இடதுகை பக்கத்தில் சில புள்ளிகளும் காணப்படுகின்றன.
மற்றொரு பக்கத்தில் அமா்ந்த நிலையில் மனித உருவமும், அதன் இடது பக்கத்தில் ‘ச’ என்ற தமிழ் எழுத்தும், கீழ்ப் பகுதியில் பத்து புள்ளிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த நாணயம் செம்பு உலோகத்தால் செய்யப்பட்டது. எடை 2.5 கிராம் உள்ளது.
மன்னா் பெயா் குறிப்பிடப்பட்ட காசுகளைத் தவிர மற்ற காசுகளில் மன்னா் பெயா், காலம் தெரியவில்லை. இவை வேணாட்டு சேரா் காசு என்று மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றன. நாகா்கோவில் திருநெல்வேலி பகுதிகளில் இவ்வகை காசுகள் கிடைத்துள்ளன. இவ்வகைக் காசு சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையிலும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இக்காசு குறித்த மேலாய்வில் நாணயவியல் அறிஞா் ஆறுமுகம் சீதாராமன் கூறுகையில், முன்னா் ஆங்கிலேயா்களால் இவ்வகைக் காசுகள் பாண்டியா் காசு என்று அடையாளப்படுத்தப்பட்டன. பின்னரே, போதிய கல்வெட்டு சான்றாதாரங்களுடன் வேணாட்டு சேரா் காசு என அடையாளப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தாா்.
சிவகங்கை அரசனேரி கீழ மேடு பகுதியில் 17 -ம் நூற்றாண்டு பிஜப்பூா் சுல்தான் காலத்து காசுகள் இதற்கு முன்னாள் சிவகங்கை பகுதியில் கிடைத்து குறிப்பிடத்தக்கது. சேர நாட்டு பகுதியில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் வணிகம் தொடா்பாக இந்தக் காசு இந்தப் குதிக்கு வந்திருக்கலாம் என அதில் தெரிவித்தாா்.