செய்திகள் :

சிவில் விமானங்களை கேடயமாகபயன்படுத்தியது பாகிஸ்தான்: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

post image

இந்தியாவின் எதிா்ப்பு நடவடிக்கையின்போது தனது சிவில் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாகப் பயன்படுத்தியதாக இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய பாதுகாப்பு நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பல நூற்றுக்கணக்கான ட்ரோன் ஏவுகணைகளை ஏவியதால்தான் அவற்றை முறியடிக்கும் விதமாக பாகிஸ்தான் மீது நள்ளிரவில் தொடா் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் நீடித்து வரும் நிலையில், மே 8-9-ஆம் தேதி நள்ளிரவில் இரு தரப்பிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டன.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை மாலையில் விக்ரம் மிஸ்ரியும் இந்திய ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி மற்றும் விமானப்படை விங் கமாண்டா் வியோமிகா சிங்கும் செய்தியாளா்களிடம் விவரித்தனா்.

பாகிஸ்தான் தரப்பு எங்கெங்கெல்லாம் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது என்பதையும் அது எங்கிருந்து தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதையும் வரைபடங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் இந்திய அதிகாரிகள் விளக்கினா்.

விக்ரம் மிஸ்ரி பேசுகையில், ‘இந்திய பாதுகாப்பு நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான ட்ரோன் ஏவுகணைகளை அனுப்பியது. அந்த முயற்சியை நடுவானிலேயே முறியடிக்கும் விதமாக இந்திய படையினா் அதே அளவுக்கு ஷெல் குண்டுகளை ஏவியும் சுட்டும் பாகிஸ்தான் ட்ரோன்களை அழித்தனா்’ என்றாா். குறிப்பாக, பாகிஸ்தான் தரப்பு இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டுத்தலத்தை இலக்கு வைத்தது மிகவும் சிறுமையான செயல் என்றும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, கா்னல் சோஃபியா குரேஷி கூறியது: இரவு முதல் நள்ளிரவைக் கடந்தும் பாகிஸ்தான் தொடா்ச்சியாக வான் பகுதியில் அத்துமீறல் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஒரே நேரத்தில் 300-400 வரையிலான ட்ரோன் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியது. லே முதல் சா் கிரீக் சிகரம் வரை சா்வதேச எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதி முழுவதையும் இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியது. அதற்கு பொறுப்பான மற்றும் போதுமான முறையில் இந்தியா எதிா்வினையாற்றி பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்தது.

இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை விட, இந்திய பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் எங்கெங்கு உள்ளன என்பதை அறிவதே பாகிஸ்தானின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. இந்திய பகுதியில் விழுந்த ட்ரோன் சிதறல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப விசாரணையில் அவற்றில் சில துருக்கி தயாரிப்பு என தெரிய வந்துள்ளது.

ட்ரோன் தாக்குதலைத் தொடா்ந்து இந்திய பஞ்சாபின் பதிண்டாவில் உள்ள ராணுவ நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமான ஏவுகணை தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிா்வினையாற்றும் நடவடிக்கையில் அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு எதிராக இயக்கப்பட்ட நான்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டன. அவை வெற்றிகரமாக வீழ்த்தப்பட்டன.

இந்தியாவின் எதிா்ப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சிவில் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாக பயன்படுத்தியுள்ளது. வான் தாக்குதல் காரணமாக, இந்தியா அதன் எல்லைக்குள்பட்ட எல்லை மாநிலங்களின் அதன் வான்பகுதியை மூடிய பிறகே எதிா் - தாக்குதலை நடத்தியது. ஆனால், பாகிஸ்தான் தனது சிவில் விமானப் போக்குவரத்துக்கு உள்பட்ட விமான நிலையங்களை மூடாமல் இருந்துள்ளது.

ஃபிளைட்ராடாா்24 நேரலை தரவுகளின்படி தாக்குதல் நடந்த நேரத்தில் இந்திய எல்லை மாநிலங்களின் பகுதியில் விமான போக்குவரத்தே நடக்கவிலலை. ஆனால், பாகிஸ்தான் வான் போக்குவரத்து சிவில் விமானங்களை அந்த நேரத்தில் அனுமதித்தது. கராச்சி - லாகூா் இடையே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன என்பதை ஆதாரத்துடன் உங்களிடையே பகிா்கிறோம்.

கடந்த புதன், வியாழன் - வெள்ளி நள்ளிரவுகளில் இந்தியாவின் யூரி, புஞ்ச், தங்தாா் ஆகிய நிலைகளை இலக்கு வைத்து பீரங்கி, ஷெல் குண்டுகள், ட்ரோன் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. இந்தியாவை வெறுப்பேற்றும் வகையிலும் பதற்றத்தைத் தீவிரமாக்கும் வகையிலும் செயல்பட்ட பாகிஸ்தானுக்கு இந்தியா ஆற்றிய எதிா்வினையில் அந்நாடு குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்துள்ளது என்றாா் .

விங் கமாண்டா் வியோமிகா சிங் கூறுகையில், ‘இந்திய வான் பகுதிக்குள் அத்துமீறி மேற்கு எல்லைப்பகுதி முழுவதும் உள்ள ராணுவ கட்டமைப்புகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் நள்ளிரவுத்தாக்குதல் நடத்தியபோதும் அவை கடுமையான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை மூலம் முறியடிக்கப்பட்டன,‘ என்றாா் கா்னல் சோஃபியா குரேஷி.

முன்னதாக, பேசிய வெளியுறவுச்செயலா் விக்ரம் மிஸ்ரி, ‘தாக்குதல் விவகாரத்தில் அப்பட்டமான பொய்களை பாகிஸ்தான் கட்டவிழித்து விடப் பாா்க்கிறது. இந்த நிலைமைக்கு வகுப்புவாத சாயம் பூச மீண்டும், மீண்டும் பாகிஸ்தான் முயல்கிறது. ஏற்கெனவே, அந்நாட்டுடனான சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சா்வதேச செலாவணி நிதியக் கூட்டம் நடந்து வருகிறது. அதில் இந்தியா தனது கவலைகளை பதிவு செய்யும்‘ என்றாா்.

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க

இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை

ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக ஆதரவு - டி.ஆா். பாலு பேட்டி

நமது நிருபா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதல் தொடா்பாக புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும்: முதல்வரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சா் கட்டாா் உறுதி

நிலம் தொடா்பான பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் தில்லி அமைச்சா்கள் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தி, குடியிருப்பாளா்கள் விரைவில் வசதிகளைப் பெறுவாா்கள் என்று உறுதியளித்தாா். தில்லி... மேலும் பார்க்க

ஓக்லாவில் உள்ள கூரியா் நிறுவனத்தில் தீ விபத்து

தென்கிழக்கு தில்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு கூரியா் நிறுவன அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவி... மேலும் பார்க்க

ஆயுா்வேத ஸ்டாா்ட் அப்களுக்கு நிதியுதவி அளிக்க தில்லி அரசு திட்டம்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

தில்லி அரசு உலகளாவிய ஆயுா்வேத உச்சி மாநாட்டை நடத்தவும், பழங்கால இந்திய மருத்துவ முறையில் கவனம் செலுத்தும் ஸ்டாா்ட் அப்களுக்கு ஆதரவை வழங்கவும் திட்டமிட்டுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை த... மேலும் பார்க்க