சீனாவுக்குத்தான் இழப்பு: 84% வரி விதிப்பு குறித்து அமெரிக்கா கருத்து!
அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை சீன அரசு விதித்துள்ளது. சீனாவில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு 104% வரி விதித்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முந்தைய வரியில் இருந்து கூடுதல் வரியை சீன அரசு விதித்துள்ளது.
பரஸ்பர வரி விதிப்பில் சீன அரசுக்கு அதிகபட்ச வரி விதித்த அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிராக சீன அரசின் இந்த வரிவிதிப்பை 'பழிவாங்கும் வரி' என அமெரிக்க அரசு குறிப்பிடுகிறது.
அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீன அரசு விதித்துள்ள வரி உயர்வு குறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெஸ்சன்ட் கூறியிருப்பதாவது,
''சீன அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் பழிவாங்கும் வரியை விதிப்பது துரதிருஷ்டவசமானது. ஏனெனில், சர்வதேச வணிக அமைப்பில் மோசமான குற்றவாளியாக அவர்கள் உள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகள் உடனான ஆலோசனையில், சீனாவின் வணிகக் கொள்கைகளை மறுசீரமைப்பது குறித்து அண்டை நாடுகள் ஆலோசிக்க முன்வந்தன. இது அமெரிக்காவுக்கான மிகப்பெரிய வெற்றி. உற்பத்தியில் மறு சீரமைப்பைக் கொண்டுவர அமெரிக்க முயற்சிக்கிறது. அதிக நுகர்வை நோக்கி சீனா மறு சீரமைப்பைக் கொண்டுவர வேண்டும்.
புதிய வரிகளுக்கு இசைவு தெரிவிக்கும் விதமாக தங்கள் நாணய மதிப்பை குறைக்கும் முயற்சியில் சீனா ஈடுபடலாம். பணமதிப்பிழப்பை ஈடுகட்ட உலகின் அனைத்து நாடுகளும் வரி விதிப்பை உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அதனால், அவர்கள் இதனைச் செய்யாமல், பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்க இறக்குமதிகளுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 10% வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 5ஆம் தேதி அமலுக்குக் கொண்டுவந்தார்.
இதனைத் தொடர்ந்து பரஸ்பர வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளின் இறக்குமதிகளுக்கு அமெரிக்காவின் திருத்தப்பட்ட வரி விதிப்பையும் இன்று முதல் (ஏப். 9) அமல்படுத்தினார்.
இதில் இந்திய இறக்குமதிகளுக்கு 26% வரியும், சீனாவுக்கு 104% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.