சங்கடஹர சதுா்த்தி: ஊதியூா் உச்சிப்பிள்ளையாா் கோயிலில் 108 மூலிகை அபிஷேகம்
சீரான வாழ்வளிப்பார்...
கலைசை, கலைசாபுரி, கோவிந்தபுரம்... என்றெல்லாம் போற்றப்படும் தலத்தின் இன்றைய பெயர் "தொட்டிக்கலை'. இத்தலத்தில் பசுக்களின் கொட்டில்கள் அதிகம் இருந்ததாலும், தொழுவம் உள்ள கழுநீர்த் தொட்டியை ஆதாரமாக வைத்து "தொட்டிக்கலை' என்ற பெயரிடப்பட்டுள்ளது.
பிரம்மன் இறைவனை வழிபட்டு அமிர்த கலசத்தைப் பெற்றதால் இத்தலமானது "கலைசை' என்றும் இறைவன் "கலசத் தியாகர்' என்றும் போற்றப்படுகிறார்.
இறைவன் நடனமாடி காட்சி தந்ததால் "சிதம்பரேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். திருவாவடுதுறை ஆதீனத்தின் குல குருவான ஸ்ரீ மாதவ சிவஞான சுவாமிகளும், இவரின் அருள்சீடரான தொட்டிக்கலை சுப்பிரமணியம் முனிவரும் வாழ்ந்து வழிபட்டு அருள் பெற்ற தலம் இது.
தமிழில் பாஷ்யம் இல்லாத குறையை நீக்க சிவஞானபோத சாஸ்திர நூலுக்கு "திராவிட மகா பாஷ்யம்' என்பதை ஸ்ரீ மாதவ சிவஞான முனிவர் இயற்றினார். அதுபோல இத்தலத்தில் வாழும் செங்கழுநீர் விநாயகர் மீது "செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் " பாடியுள்ளார். சிதம்பரேஸ்வரர் புகழ் பாடும் "கலைசை பதிற்றுப்பத்து அந்ததாதி" பாடியுள்ளார்.
தொட்டிகலை சுப்பிரமணியம் முனிவர் தோன்றியது காட்டுமன்னார்குடி என்றாலும் தன் ஈடுபாட்டால் அதிக நாள்கள் வாழ்ந்த இவ்வூரை தொடர்புப்படுத்தவே தொட்டிகலை சுப்பிரமணியர் என்று போற்றப்படுகிறார். இத்தலத்து இலக்கியங்கள் வெளிவர மூல காரணமாக விளங்கியவர் உ.வே. சாமிநாத ஐயர்.
தில்லை நடராஜர் தனித்து நடனமாடிய இந்த நடராஜரை காண கண் கோடி வேண்டும் என்பது தரிசித்தவர்கள் மனதில் இயல்பாகத் தோன்றும் எண்ணமாகும். கிழக்கு முகமாக எதிரே சிவகங்கை தீர்த்தத்தைக் கொண்டு கோயில் அமைந்துள்ளது. தாமரை பீடத்தில் வட்ட வடிவ ஆவுடையாராக இறைவன் இந்திரனையும், மகான்களையும், மன்னர்களையும் கவர்ந்தவர் என்கிறது தல வரலாறு.
கருவறை சுற்றில் கணபதி, பிரம்மன் துர்க்கை என பஞ்ச கோட்டங்கள் அமைந்துள்ளன. மகா மண்டபத்தின் மேல் தளத்தில் எழில்மிகு கவிழ்ந்த தாமரை மட்டும் அதனை ஒட்டிய புடைப்புச் சிற்பங்களும் கலைநயத்தைப் பறைசாற்றுகின்றன. தூண்களில் பல்வேறு புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. சுவாமி சந்நியின் இடதுபுறம் அன்னை சிவகாமி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. சிவகங்கை தீர்த்தம். தல மரம் வில்வமரம்.
சிதிலமடைந்த இந்தக் கோயிலை சிவனடியார் ரா.சு. சுப்பிரமணியனின் பெரும் முயற்சியால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இத்தலத்தில் பழமையான வைணவக் கோயிலும் அமைந்துள்ளது.
தில்லை எனும் சிதம்பரம் திருத்தலம் சென்று நடராஜரைத் தரிசிக்க இயலாதவர்கள், அதற்கு இணையாக இறைவன் நடனமாடிய தொட்டிகலை சிதம்பரேஸ்வரரை தரிசித்து அதே பயனை பெறலாம். திருவள்ளூரில் இருந்து 10 கி.மீ,. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. அரக்கோணம் } சென்னை ரயில் வழித்தடத்தில் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்திருக்கிறது.
- பனையபுரம் அதியமான்