பூமாலை சாற்றி அருள் பெற்றவர்..
"வனப் பகுதியில் தவமிருந்த ஜாபாலி எனும் மகரிஷியின் வேண்டுகோளின்பேரில், இரண்யனை நரசிம்மர் வதம் செய்து உக்ர நரசிம்ம சுவாமியாக (கோபம் கொண்டவராக) மூன்று கண்களுடன் (திரி நேத்திரத்துடன்) காட்சி கொடுத்தார்' என்பது புராண வரலாறு. கோயிலின் பரமபத வாசல் மண்டபத்தில் அதற்கு எதிரில் உள்ள தூணில் ஜாபாலி மகரிஷியின் சிற்ப வடிவமும், ஒரு தூணில் நரசிம்ம சுவாமி சிற்ப வடிவத்தையும் காணலாம்.
பாடலாத்ரி என்று அழைக்கப்படும் இந்தத் தலமானது "பிரம்மாண்ட புராணம்' இடம்பெற்ற தலமாகும். "பாடலம்' என்றும் "சிவப்பு', "அத்ரி' என்றால் "மலை'. "சிகப்பான குன்று' எனப் பொருள்படும். கருவறையில் எழுந்தருளி அருள்புரியும் நரசிம்மப் பெருமாள் சிவந்த மேனியாக அருள்பாலிக்கிறார். கோயில் அமைந்துள்ள பகுதியும் "செங்குன்றம்' என்று குறிப்பிடப்படுகிறது.
பல்லவ மன்னர்களான முதலாம் நரசிம்மவர்மன் (630}668), முதலாம் பரமேசுவரவர்மன் (670 } 700) கால கட்டத்தில் கோயில் எடுப்பிக்கப்பட்டதாகும். மலைக்குன்றை குடைந்து நரசிம்மப் பெருமாளுக்காக எடுக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும்.
சோழமன்னன் ராஜராஜ சோழனின் காலத்தில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற தானம் அளிக்கப்பட்டதாகக் கூறும் கல்வெட்டுகள் ( 990, 993) காணப்படுகின்றன.
பெருமாள் "நரசிங்க விண்ணகர் ஆழ்வார்' என்றும் "ஆழ்வார் நரசிங்க விண்ணகர் தேவர்' எனவும் அழைக்கப்படுகிறார். "விண்ணகரம்" என்றால் பெருமாள் கோயில் என்பதாகும். இந்தக் கோயில் "நரசிங்க விண்ணகர்' என அழைக்கப்படுகிறது.
"செங்குன்ற நாட்டு சபையினரிடமிருந்து நிலம் வாங்கி, பெருமாளுக்கு அமுது படைப்பதற்காகவும், விளக்கு எரிப்பதற்காகவும் தானமாக அய்யாறன் நக்கன் என்பவர் அளித்தார்' என்றும் "விஜய நகரமன்னர் காலத்தில் நாகப்ப நாயக்கன் மகன் வெங்கப்ப நாயக்கனால் கருவறைக்கு முன் மண்டபமும், வாசல் நிலைக்காலும் அமைக்கப்பட்டது' என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றது.
முன் மண்டபத் தூண்களில் திருமாலின் அவதார வடிவங்களும், நாயக்கமன்னன் உருவமும் அவனது தேவியின் வடிவமும் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகின்றன.
எனவே இக்கோயிலில் மண்டபம் கட்டி கோயிலை விரிவாக்கத்தை மன்னனே செய்திருக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது.
கிழக்கு நோக்கிய கோயில் வாயிலில் ஐந்து நிலைகோபுரம், வாயிலை அடுத்து தீபஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சந்நிதி ஆகியன அமைந்துள்ளன.
மூலவர் சந்நிதியின் இருபுறமும் தாயார் சந்நிதியும், ஆண்டாள் சந்நிதியும் அமைந்துள்ளன. தாயார் அகோபிலவல்லி என்ற திருநாமம் கொண்டு தனது மேலிரு கரங்களில் தாமரை மலர்களையும் முன்னிரு கரங்களில் அபய } வரத முத்திரைத் தாங்கியுள்ளார்.
மூலவரைச் சுற்றி வலம் வர இயலாது. ஆனால் தாயார், ஆண்டாள் சந்நிதிகளை சுற்றி வரலாம். தனிச் சந்நிதியில் விஷ்வக்சேனர் (சேனை முதன்மையார்), லட்சுமி நரசிம்மரும் தெற்கு நோக்கி காட்சி அளிக்கின்றனர். கருடாழ்வார் சந்நிதிக்கு முன் மண்டபத்தில் ஆழ்வார்கள் நம்மாழ்வார் } குலசேகராழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் காட்சி அளிக்கின்றனர். விஷ்வக்சேனர், திருகச்சி நம்பிகள், ராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியர், முதலியாண்டான், கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகள், ஆகியோரின் திருமேனிகள் அமைந்துள்ளன.
முன் மண்டப நுழைவு வாயிலில், "கோலப்படி' எனப்படும் ஐந்து கற்களால் அமைக்கப்பட்ட சிறு மேடையின் மீது பெருமாள் எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருள்வார்.
கிரிவலம் வரும் பொழுது குன்றின் மேற்கு பக்கத்தில் அழிஞ்சல் மரம் எனும் மூலிகை மரம் அமைந்துள்ளது. ஆனி மாதத்தில் பழுத்த பழங்கள் கீழே விழுந்து அதன் விதைகள் மீண்டும் நகர்ந்து மரத்தின் அடியில் கிளைகளில் ஒட்டிக் கொள்ளும். "இன்ப, துன்பங்களைக் கடந்து பக்குவப்பட்ட நாமும் இறைவனை நோக்கிச் சென்று அவனிடம் சரண் அடைய வேண்டும்' என்பதை ஆன்மிக வழியில் உணர்த்துகிறது. ஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரியிலும், ஆண்டாள் அருளிய நாச்சியார் மொழியிலும் இம்மரத்தின் சிறப்பு கூறப்படுகிறது.
கோயில் குடைவரையில் நரசிம்மர் மூலவராக காட்சி அளிக்கிறார். மூலவருக்கு நான்கு கரங்கள். மேலிரு கரங்களில் சக்கரம் - சங்கு தாங்கியுள்ளார். கீழிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையுடனும் இடதுகரம் தொடைமீது ஊன்றிய நிலையிலும் வலது காலை மடித்தும் இடது காலை தொங்கவிட்ட நிலையிலும் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அற்புத கோலத்தை வணங்கலாம். நெற்றியில் மூன்றாவது கண் (திரி நேத்ரதாரி) உடன் காட்சி தருகிறார்.
தீப ஆரத்தியின்போது மூலவர் நெற்றியில் அணிந்திருக்கும் திருமண்ணை (நாமத்தை) சற்று அகற்றும்பொழுது மூன்றாவது கண்ணை பக்தர்கள் தரிசிக்கலாம்.
மூலவர் திருமார்பில் மகாலட்சுமியுடன் சகஸ்ர நாம மாலை, சாளக்கிராம மாலை, அணிந்து காட்சியளிக்கிறார். திருமணம், முடிகாணிக்கை, காதுகுத்தல் போன்ற பிரார்த்தனைகளை பக்தர்கள் மேற்கொண்டு பெருமாளை வழிபடுகின்றனர்.
சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் 48 கி.மீ. தொலைவில் (சிங்கப்பெருமாள் கோவில்) இக்கோயில் அமைந்துள்ளது.
கி.ஸ்ரீதரன் - தொல்லியல் துறை (ஓய்வு).