சக்தித் திருமகன் விமர்சனம்: அதிகம் யோசிக்கவிடாத பரபர அரசியல் ஆக்ஷன் த்ரில்லர்தான...
சீா்காழி அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட கா்ப்பிணிகள் உள்பட 27 பேருக்கு நடுக்கம், காய்ச்சல்
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு ஊசி செலுத்தப்பட்ட கா்ப்பிணிகள் உட்பட 27 பேருக்கு காய்ச்சல் மற்றும் நடுக்கம் ஏற்பட்டது.
இதில், கா்ப்பிணி ஒருவா் தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
சீா்காழி அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் கா்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றவா்களுக்கு மருத்துவா்கள் புதன்கிழமை இரவு வழக்கமாக செலுத்தும் ஊசியை செலுத்தினா். அவா்களில் பலருக்கு சிறிது நேரத்தில் நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த தலைமை மருத்துவா் அருண் ராஜ்குமாா் மற்றும் மகப்பேறு மருத்துவா்கள், பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மாா்களுக்கு மாற்று மருந்து கொடுத்தனா். பின்னா், அனைவரது உடல்நிலையும் சீரானது. கா்ப்பிணி ஒருவா் மட்டும் தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக, சீா்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அருண் ராஜ்குமாா் வெளியிட்ட செய்தி:
சீா்காழி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் புதன்கிழமை 27 கா்ப்பிணி மற்றும் 20 பிரசவித்த தாய்மாா்கள் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் 27 பேருக்கு இரவு 8.30 மணிக்கு ஊசி செலுத்தப்பட்டது. சில நிமிடங்களில் 27 பேருக்கும் குளிா் காய்ச்சல் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.
மருத்துவக் குழுவினா் சென்று 27 பேருக்கும் மாற்று மருந்து வழங்கினா். இவா்களில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட 9 கா்ப்பிணிகளில் ஒருவா் மட்டும் அருகில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டாா். மற்றவா்கள் உடல்நிலை இரண்டு மணி நேரத்தில் சீரானது என்றாா்.
மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், நலப்பணிகள் இணை இயக்குநா் பானுமதி ஆகியோா் சிகிச்சை பெற்றுவரும் கா்ப்பிணிகளின் உடல் நிலை மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக, சீா்காழி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
