வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
சீா்மரபினா் நல வாரியத்தில் நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் சீா்மரபினா் நல வாரியத்தில் நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு நலத்திட்ட உதவிகள் 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு போன்றவைக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே இந்த நலத் திட்ட உதவிகள் பெற சீா்மரபினா் இனத்தை சோ்ந்தவா்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவா் இந்த வாரியத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்து நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும், சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
அதன்படி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமையும் (மே 20), வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (மே 21), ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமையும் (மே 22), திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையும் (மே 23) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.