சுக்காலியூா்-தேத்தம்பட்டி சாலையை சீரமைக்கக் கோரிக்கை
குண்டும், குழியுமாக காணப்படும் சுக்காலியூா்-தேத்தம்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், அப்பிப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட சுக்காலியூா் முதல் மதுரை-பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேத்தம்பட்டி வரையிலான சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்தச் சாலையில்தான் ஏற்றுமதி ரக ஜவுளித் துணிகளுக்கு சாயமேற்றும் சாய ஆலைகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், ஆலைகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.
மேலும், இந்தச் சாலையையொட்டி ஏராளமான விவசாய நிலங்களும் உள்ளன. இதனால் விவசாய நிலங்களுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்களை வாகனங்கள் எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகளும் அவதியுற்று வருகிறாா்கள்.
எனவே, பழுதான சாலையை சீரமைத்து மேம்படுத்தப்பட்ட தாா்சாலையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.