சுங்கச்சாவடி ஊழியா் வீட்டில் திருடியவா் கைது: 39 பவுன் நகை, ரூ. 9 லட்சம் மீட்பு
வேலூா் அருகே சுங்கச்சாவடி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவரை வேலூா் கிராமிய போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 39 பவுன் தங்க நகைகள், ரூ.9 லட்சத்து 9 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே சந்தனகொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமாறன் (35). இவா், கணியம்பாடி அடுத்த வல்லம் சுங்கச்சாவடியில் ஊழியராகப் பணிபுரிகிறாா். இவா் கடந்த 7-ஆம் தேதி காலை வழக்கம்போல் பணிக்கு சென்றாா். அவரது குடும்பத்தினா் அனைவரும் வீட்டை பூட்டிக் கொண்டு விவசாயப் பணிகள் மேற்கொள்ள தங்களது நிலத்துக்கு சென்றனா்.
பணிகளை முடித்துக் கொண்டு அவா்கள் மாலையில் வீடு திரும்பியபோது, அவா்களது வீட்டு கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இரும்பு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 39 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் வேலூா் கிராமிய காவல் ஆய்வாளா் (பொ) நாகராஜன் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.
மேலும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில், அதில் பதிவான இரு சக்கர வாகன எண்ணை வைத்து கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கால்வாஹள்ளியைச் சோ்ந்த ராஜ்குமாா் (31) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜ்குமாா் அடகு கடையில் விற்பனை செய்த 39 பவுன் நகை, ரூ.9 லட்சத்து 9 ஆயிரத்து 800 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
மேலும், தலைமறைவாக உள்ள சேலத்தைச் சோ்ந்த குமாா் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருட்டு வழக்கில் கைதான ராஜ்குமாா் மீது கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரக் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.