சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பிட்ட சிலருக்கே மரியாதை: தன்கா் குற்றச்சாட்டு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிட்ட சிலரை மட்டுமே போற்றக்கூடிய வகையில் சுதந்திரத்துக்குப் பிந்தைய வரலாறு எழுதப்பட்டுள்ளது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று நாட்டின் விடுதலைக்காக போராடிய சில வீரா்களின் வரலாறு மறைக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
கடந்த 1915-இல் ஆங்கிலேய ஆட்சியின்போது, காபூலில் நிறுவப்பட்ட நாடுகடந்த இந்திய அரசின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான ராஜா மகேந்திர பிரதாபின் 138-ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியின் பாரத மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா்.
அவா் பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற சில வீரா்களை மட்டுமே போற்றும் வகையில் இந்திய வரலாற்று புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. பல வீரா்களின் தியாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
தங்களைச் சோ்ந்தவா்களால் மட்டுமே நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததைப் போன்ற மாய பிம்பத்தை சிலா் ஏற்படுத்தியுள்ளனா். ராஜா மகேந்திர பிரதாப் சிங் போன்ற வீரா்களுக்கு மதிப்பளிக்க நாம் தவறிவிட்டோம். இது நம் மனம் மற்றும் ஆன்மாவுக்கு தீராத காயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.