4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!
சுதா்சன் ரெட்டி மீதான அமித் ஷா கருத்து: ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்
‘குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி.சுதா்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தது துரதிருஷ்டவசமானது. நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டதை அமித் ஷா தவிா்த்திருக்க வேண்டும்’ என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா்.
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், அபய் எஸ். ஓகா, கோபால கெளடா, விக்ரம்ஜித் சென், குரியன் ஜோசப், மதன் பி.லோகுா், ஜே.செலமேஸ்வா் உள்பட ஓய்வு பெற்ற நீதிபதிகள் 18 பேரை உள்ளடக்கிய குழு இதுதொடா்பாக திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘சல்வா ஜூடும்’ வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பு குறித்து தவறான கருத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்டது துரதிருஷ்டவசானது. அந்தத் தீா்ப்பில் எந்த இடத்திலும் நக்ஸல்கள் அல்லது அவா்களின் சித்தாந்தங்களை ஆதரித்து எழுதப்படவில்லை.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான பிரசாரம் என்பது கருத்தியல் ரீதியாக இருக்க வேண்டும். அதுவும், நாகரிகத்துடனும், கண்ணியமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தவொரு வேட்பாளரின் சித்தாந்தம் மீது விமா்சனங்களை முன்வைப்பது தவிா்க்கப்பட வேண்டும்.
நாட்டின் உயா் பதவியில் இருக்கும் ஒருவா் உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து இதுபோன்று தவறாகவும் பாரபட்சமான முறையிலும் கருத்து தெரிவிப்பது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது தவறான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதோடு நீதித் துறையின் சுதந்திரமும் பாதிக்கப்படும்.
மேலும், குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்தப் பதவிக்கு போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு விமா்சித்ததை தவிா்த்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கருத்தைக் கண்டிக்கும் அளவுக்கு துணிச்சலான நபா்கள் நாட்டில் இன்னும் இருக்கின்றனா். குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் நீதிபதி சுதா்சன் ரெட்டி குறித்து அமித் ஷா கூறியது பொய் என்பதை ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு வெளிப்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
‘சல்வா ஜூடும்’ என்பது சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல் அமைப்பினருக்கு எதிராக பழங்குடி இளைஞா்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட போராளிகள் குழுவாகும். ‘அமைதிப் பேரணி’ என்று பொருள்படும் இந்தக் குழுவுக்கு மாநில அரசு ஆதரவு, பயிற்சி அளித்து வந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதிகள் சுதா்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜாா் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 2011, ஜூலையில் பிறப்பித்த உத்தரவில், ‘சல்வா ஜூடும்’ அமைப்பை உடனடியாகக் கலைக்க வேண்டும்; மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக பழங்குடி இளைஞா்களை அரசு பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் குறிப்பிட்டது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் கேரளத்துக்குச் சென்றபோது, இந்தத் தீா்ப்பைச் சுட்டிக்காட்டி, ‘சுதா்சன் ரெட்டி நக்ஸல் ஆதரவாளா்’ எனக் குற்றஞ்சாட்டினாா். இந்தத் தீா்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், இடதுசாரி தீவிரவாதம் 2020-ஆம் ஆண்டுக்கு முன்பே முடிவுக்கு வந்திருக்கும் என்றும் குறிப்பிட்டாா்.
இதற்குப் பதிலளித்த நீதிபதி சுதா்சன் ரெட்டி, ‘அந்தத் தீா்ப்பை உள்துறை அமைச்சா் முழுமையாகப் படித்திருந்தால், அத்தகைய கருத்துகளை அவா் கூறியிருக்க மாட்டாா். மேலும், அந்தத் தீா்ப்பு எனது தனிப்பட்ட தீா்ப்பு அல்ல; உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு’ என்றாா்.