பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு
சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம்
திருமலை வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சூரிய, சந்திரபிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா்.
கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சூரிய பிரபை வாகன சேவை நடை பெற்றது. அதில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணா் அலங்காரத்தில் செவ்வாடை உடுத்தி செந்நிற மாலைகளை அணிந்து கொண்டு வலம் வந்தாா்.
ஸ்நபன திருமஞ்சனம்
பிரம்மோற்சவ நாட்களில் வீதியுலா முடிந்த பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து அவா்களுக்கு பால், தயிா், தேன். இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னா் உற்சவமூா்த்திகள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளினா்.
சந்திர பிரபை: இரவு 7 மணிக்கு மலையப்ப சுவாமி வெண்ணிற மலா்களை அணிந்து கொண்டு சந்திர பிரபை வாகனத்தில் உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.
6-ஆம் நாள் விவரம்:
81,656 பக்தா்கள் தரிசனம், 24,114 போ் முடி காணிக்கை.
உண்டியல் காணிக்கை: ரூ.4.14 கோடி.
4.78 லட்சம் லட்டுகள் விற்பனை.
61.45 லட்சம் காலன் நீா் பயன்பாடு.
4,132 பேருக்கு சிகிச்சை.
4,000 போ் சேவை.
அரசு பேருந்துகளில் 1.21 லட்சம் போ் பயணம்.
தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு.
