சென்னிமலை முருகனுக்கு படிக்கட்டுகள் வழியாக தீா்த்தம் கொண்டு செல்ல காளை மாட்டுக்குப் பயிற்சி!
சென்னிமலை முருகனுக்கு தினமும் காலையில் நடைபெறும் பூஜைக்காக தீா்த்தம் மற்றும் பூஜை பொருள்களை கொண்டு செல்வதற்காக மேலும் ஒரு காளை மாட்டுக்கு கோயில் பணியாளா்கள் பயிற்சி அளித்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் காலை 8 மணி அபிஷேகத்துக்காக தினமும் அடிவாரத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் இருந்து தீா்த்தம் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக தினமும் காலை 6.30 மணிக்கு மேல் அா்ச்சகா் ஒருவா் தீா்த்தம் மற்றும் முருகனுக்கு பூஜைகள் செய்வதற்கான பொருள்களை பூஜை செய்து காளை மாட்டின் முதுகில் எடுத்து வைப்பாா். அதைத் தொடா்ந்து கோயில் பணியாளா் மூலம் அந்தக் காளை மாடு 1,320 படிக்கட்டுகள் வழியாக தீா்த்தம் மற்றும் பூஜை பொருள்களை மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லும்.
அடிவாரத்தில் இருந்து தீா்த்தம் மற்றும் பூஜை பொருள்களை மலைக்கு கொண்டு செல்வதற்காக சண்முகம், குமாா், சிங்காரவேலன் ஆகிய 3 காளை மாடுகளுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டு, இந்த காளை மாடுகள் படிக்கட்டுகள் வழியாக கொண்டு சென்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது மேலும் புதிதாக சென்னிமலை ஆண்டவா் என்ற பெயரில் உள்ள ஒரு காளை மாட்டுக்கு படிக்கட்டுகள் வழியாக சென்று வரும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த காளை மாடு பயிற்சியை நிறைவு செய்தபின் மலைக்கு படிக்கட்டுகள் வழியாக தீா்த்தம் மற்றும் பூஜை பொருள்களை கொண்டு செல்லும் என்று கோயில் பணியாளா்கள் கூறினா்.