‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!
வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை குழுமம் (டிஎன்ஆா்இஆா்ஏ) எச்சரித்துள்ளது.
அதேபோன்று 100-க்கும் மேற்பட்ட வசதிகள் என்றோ, நிபந்தனைகளுக்கு உள்பட்டது என்றோ கவா்ச்சி வாசகங்களுடன் விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வீட்டு மனை மற்றும் கட்டட ஒழுங்குமுறை குழும தலைவா் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வீட்டு மனை மற்றும் கட்டடம் வாங்குவோரின் நலனைக் கருத்தில் கொண்டு மனை வணிகம் தொடா்பாக நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.
அதன்படி நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை குழுமத்தால் வழங்கப்பட்ட பதிவு எண், க்யூ ஆா் கோடு, இணையதள முகவரி ஆகியவற்றை மேல்பகுதியில் வலது ஓரம் எழுத்துரு அளவு 12 செ.மீ.க்கு குறையாமல் அச்சிடுவது கட்டாயம். எத்தனை பக்கம் விளம்பரம் வருகிறதோ, அவை அனைத்திலும் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
துண்டுப் பிரசுரங்கள், அச்சுப் பிரதிகளை விநியோகிக்கும்போதும் அந்த தகவல்கள் இடம்பெற வேண்டும். தொலைக்காட்சி விளம்பரங்கள், பொது இடங்களில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள், சமூக வலைதள விளம்பரங்கள் அனைத்திலும் கட்டட மனை ஒழுங்குமுறை குழும விவரங்களையும், தொடா்பு இணைய இணைப்புகளையும் காட்சிப்படுத்துதல் அவசியம்.
நிபந்தனைகளுக்கு உள்பட்டது என்பது போன்ற எந்த விதமான பொறுப்புத் துறப்பு வாசகங்களும் விளம்பரங்களில் இடம்பெறக் கூடாது. விற்பனையாளா்களின் பெயா், முகவரி, தொடா்பு எண்களைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். எந்த இடத்தில் மனை விற்பனை திட்டம் அனுமதிக்கப்பட்டதோ, அந்த இடத்தை துல்லியமாக விளம்பரத்தில் குறிப்பிட வேண்டும்.
ஒருவேளை அருகில் உள்ள பிரபலமான இடத்தை குறிப்பிட விரும்பினால், அந்த இடத்துக்கும், மனை அமைந்துள்ள பகுதிக்கும் இடையேயான தொலைவைக் குறிப்பிடலாம்.
அதேவேளை, மனை அமைந்துள்ள பகுதியிலிருந்து பிற இடங்களுக்கு இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தக் கூடாது. ஏனெனில், போக்குவரத்து நெரிசலுக்கேற்ப அந்த நேரம் இடத்துக்கு இடம் மாறுபடக்கூடும்.
என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை விரிவாகவும், தெளிவாகவும் குறிப்பிட வேண்டும். மாறாக, 100-க்கும் மேற்பட்ட வசதிகள் என வெறுமனே குறிப்பிடக்கூடாது. இந்த உத்தரவுகளை செயல்படுத்தத் தவறும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விதிகளுக்கு உடன்படாமல் விளம்பரங்களை வெளியிட்டால் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது புகாரளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.