"இதனால்தான் லாராவின் சாதனையை முறியடிக்கவில்லை" - 367* ரன்களில் டிக்ளேர் செய்தது ...
Birds: அழிவின் விளிம்பில் 500 பறவை இனங்கள்; ஆராய்ச்சியில் அதிர்ச்சி முடிவுகள்; காரணம் என்ன?
காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அடுத்த நூற்றாண்டுக்குள் 500-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் ரீடிங் பல்கலைக்கழக (University of Reading) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை சூழலியல் மற்றும் பரிணாம நோக்கில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கி.பி 1500 முதல் பதிவான பறவை அழிவுகளை விட வர இருக்கும் அழிவு மூன்று மடங்கு அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த ஆய்வறிக்கையின்படி, வெறும் கழுத்துள்ள குடைப்பறவை (bare-necked umbrellabird) மற்றும் தலைக்கவச ஹார்ன்பில் (helmeted hornbill) போன்ற குறிப்பிடத்தக்க இனங்கள் ஆபத்தில் உள்ளன.
இவற்றின் இழப்பு இந்தப் பறவைகளைச் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கணிசமாகப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், காலநிலை மாற்றம், வேட்டையாடுதல், பறவைகளின் வாழ்விட அழிவு ஆகிய மனிதனால் தூண்டப்படும் அச்சுறுத்தல்களை நிறுத்துவதால் கூட, இந்தப் பறவை அழிவை முழுமையாகத் தடுக்காது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
IUCN சிவப்புப் பட்டியல் தரவுகளைக் கொண்டு சுமார் 10,000 பறவை இனங்களை ஆய்வு செய்து நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், பெரிய பறவைகள் வேட்டையாடுதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடியவை என்றும், அகலமான இறக்கைகள் கொண்ட பறவைகள் வாழ்விட இழப்பால் பாதிக்கப்படக்கூடியவை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேசமயம், வாழ்விட அழிவை நிறுத்துவது ஒட்டுமொத்தமாக அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்களைக் காப்பாற்றும் என்று இந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
சுற்றுச்சூழல் அமைப்பு செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட சில பறவை இனங்கள் இருக்கின்றன. வேட்டையாடுதலைக் குறைப்பது, விபத்து இறப்புகளைத் தடுப்பது ஆகிய நடவடிக்கைகளானது இப்பறவை இனங்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

இதனால், வரவிருக்கும் இந்த அழிவின் நெருக்கடியைத் தணிப்பதற்கும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பு மற்றும் முன்முயற்சியுடன் கூடிய உத்திகள் அவசியம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
இது குறித்து இந்த ஆராய்ச்சி முதன்மை ஆசிரியர் கெர்ரி ஸ்டீவர்ட், "பல பறவைகள் இனங்கள் ஏற்கனவே அழியும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில் பறவை அழிவு நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம்.
அவற்றின் வாழ்விடங்களில் மனித அச்சுறுத்தல்களைக் குறைக்க உடனடி நடவடிக்கை தேவை.
அதேசமயம், மனித தாக்கங்களைக் குறைப்பது மட்டுமே அவற்றைக் காப்பாற்றாது.
இந்த இனங்கள் உயிர்வாழ இனப்பெருக்கத் திட்டங்கள் மற்றும் வாழ்விட மறுசீரமைப்பு போன்ற சிறப்பு மீட்புத் திட்டங்கள் தேவை" என்று கூறினார்.
மேலும், இந்த ஆராய்ச்சியின் மூத்த பேராசிரியை மானுவேலா கோன்சலஸ் சுவாரெஸ், "அடுத்த நூற்றாண்டில் இவை உயிர்வாழ வேண்டுமென்றால், இந்த அச்சுறுத்தல்களைத் தடுப்பது மட்டும் போதாது.
சுமார் 250 முதல் 350 இனங்களுக்கு இனப்பெருக்கத் திட்டங்கள் மற்றும் வாழ்விட மறுசீரமைப்பு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படும்.
மிகவும் அரிய பறவைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பது, பறவைகளின் வடிவங்கள் மற்றும் அளவுகளின் குறிப்பிடத்தக்கப் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும்.
இது சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிக முக்கியம்" கூறினார்.