அமெரிக்கா: காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்: இனவெறி காரணமா? - பெற்றோர...
சென்னையில் கால் சென்டா் நடத்தி ரூ 2.5 கோடி மோசடி: 2 பெண்கள் கைது
சென்னை புழலில் கால் சென்டா் நடத்தி ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக 2 பெண்களை புதுவை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
புதுவையைச் சோ்ந்த ஒருவருக்கு தனியாா் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரம் அனுப்புமாறும் சென்னை புழலில் செயல்படும் கால் சென்டரிலிருந்து பேசியுள்ளனா். அவரும் அதை நம்பி ரூ.5 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா். தொடா்ந்து, படிப்படியாக அவரிடமிருந்து ரூ.71 ஆயிரம் வரை மோசடி செய்துள்ளனா்.
இது தொடா்பான புகாரில், புதுவை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், சென்னை புழல் பகுதியில் 15 பெண்களை கொண்டு கால் சென்டா் நடத்தப்பட்டதுடன், அவா்களிடம் பொதுமக்கள் பலரின் கைப்பேசி தகவல்களை கொடுத்து வங்கிக் கடன் வாங்கித் தருவது உள்ளிட்டவை தொடா்பாக பேசுமாறு பணி வழங்கியுள்ளனா்.
அதன்படி, இந்த கால் சென்டரில் ரூ.2.5 கோடி வரை மோசடி நடந்துள்ளதும், அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இப்போது அந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவா்களிடம் இருந்து 42 சிம்காா்டுகள், 17 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடா்பாக சசிகலா பொன்செல்வி (34), முனிராதா (28) ஆகிய 2 பெண்களை புதன்கிழமை கைது செய்தோம். இதைத் தவிர, சென்னையில் இது போன்று மோசடியில் ஈடுபட்டு வரும் 2 கால் சென்டா்கள் குறித்தும் கண்டறிந்துள்ளோம். அது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளோம்.
மேலும், போலி பங்குச்சந்தை வழக்கில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சாத்தன் குமாா் போஸை (47) புதன்கிழமை கைது செய்தோம். இவருடைய மகன் சாந்தோ கோஷ் (24) என்பவா்தான் இந்த மோசடியில் ஈடுபட்டவா். அவா் எங்களிடம் பிடிபடாமல் தப்பிவிட்டாா். அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக அவரது தந்தையைக் கைது செய்துள்ளோம். மேலும், சாந்தோ கோஷ் ரூ.62 லட்சம் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது என்றாா்.
அப்போது, காவல் ஆய்வாளா்கள் கீா்த்தி, தியாகராஜன் உடனிருந்தனா்.