சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன: காவல் ஆணையா் அருண்
சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன என்று மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் கூறினாா்.
ஹரியாணாவில் 43-ஆவது அகில இந்திய அளவிலான காவல் துறையினருக்கான குதிரையேற்றப் போட்டி கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழக காவல் துறையின் சாா்பில் சென்னை பெருநகர காவல் துறையின் குதிரைப்படை பங்கேற்றது.
இப்போட்டியில் குதிரை சவாரி செய்யும் திறன் பிரிவில், தமிழக காவல் துறையின் உதவி காவல் கண்காணிப்பாளா் ஷூபம் நாகா்கோஜ் வெள்ளி பதக்கமும், உதவி ஆணையா் அஜய் தங்கம் வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.
‘டிரஸ்சேஜ்’ எனப்படும் குதிரை பயிற்சி ஒருங்கிணைப்புப் பிரிவில் பெண் காவலா் சுகன்யா தங்கமும், சவாரி திறன் பிரிவில் வெள்ளியும் என 2 பதக்கங்களை வென்றாா். குதிரை பராமரிப்பாளா் தோ்வில் குதிரை பராமரிப்பாளா் ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். குதிரையுடன் அதிக தூரம் தாண்டும் பிரிவில் காவலா் மணிகண்டன் 4-ஆவது இடம்பிடித்தாா்.
வெற்றி பெற்றவா்களை பாராட்டும் வகையில், சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பதக்கங்களை வென்ற குதிரைப்படை பிரிவைச் சோ்ந்த அதிகாரிகளுக்கும் போலீஸாருக்கும் காவல் ஆணையா் அருண் பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி கெளரவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையா்கள் கபில்குமாா் சி.சரத்கா், என்.கண்ணன், ஆா்.சுதாகா், ராதிகா, இணை ஆணையா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவின் முடிவில், காவல் ஆணையா் அருண் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. மேலும், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் பயன்பாடும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.