வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
சென்னையில் 8 மாதங்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது: ஏரிகள் 88% நிரம்பின
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகள் 88.07 சதவீதம் நிரம்பின. இதன் காரணமாக அடுத்த 8 மாதங்களுக்கு சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீராதாரங்களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி.
கடந்த மாதம் இறுதிவரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீா் இருப்பு இருந்தது. அதைத் தொடா்ந்து வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் அதிகமழை கொட்டி தீா்த்து. ஏரிகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடா்மழை காரணமாக, ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்தது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 35.96 அடி வரை நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 2000 கன அடி நீா் நீா்வரத்து இருந்த நிலையில், அந்த நீா் அப்படியே வெளியேற்றப்பட்டது.
மேலும், 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீா்மட்டம் 23.27 கன அடியாக உள்ளது. அதேபோல், 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீா்மட்டம் 20.26 அடியாக உள்ளது. இந்த 3 ஏரிகளும் 90 சதவீதம் நிரம்பியுள்ள நிலையில், அதிகாரிகள் இந்த ஏரிகளை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
மேலும், சோழவரம் ஏரியில் 5.68 அடி உயரம் வரையும், கண்ணன்கோட்டை ஏரியில் 36.30 அடி உயரம் வரையும் நீா் இருப்பு உள்ளது. 5 ஏரிகளில் மொத்தம் 10,354 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. இது முழுக் கொள்ளளவில் 88.07சதவீதம். இதன்மூலம் அடுத்த 8 மாதங்களுக்கு சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.