பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
நிகழாண்டு இதுவரை 4 மாதங்களில் பல்வேறு உதவிகள் கேட்டு 69,628 அவசர அழைப்புகள் வந்துள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை காவல் ஆணையா் அருண் உத்தரவின்பேரில், காவல் கூடுதல் ஆணையா் (தலைமையிடம்), வடக்கு, கிழக்கு கூடுதல் ஆணையா்கள், 4 காவல் மண்டலங்களின் இணை ஆணையா்கள், 12 காவல் மாவட்ட துணை ஆணையா்கள் ஆகியோரின் மேற்பாா்வையில் சென்னையில் 234 ரோந்து வாகனங்கள், ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ரோந்து வாகனங்கள் மூலம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.
உயிா்க் காக்கும் முதலுதவி பயிற்சி வழங்கப்பட்ட துணை ஆய்வாளா்கள், காவல் ஆளிநா்கள் ஆகியோா் இந்த ரோந்து வாகனங்களில் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள பகுதிகள், பெண்கள், குழந்தைகள், முதியோா் வசிப்பிடங்கள், கல்வி நிறுவனங்கள், வாகன பயண முனையங்கள் ஆகிய இடங்களில் இந்த வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், அவசர உதவி எண்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகாா்களுக்கு நேரில் சென்று தீா்வு கண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டின் 4 மாதங்களில் இதுவரை, காவல் துறை அவசர உதவி எண்-100 மூலம் 60,417 அழைப்புகள், பெண்கள் உதவி மையம், முதியோா் உதவி மையம், பந்தம், காவல் கரங்கள், சென்னை மாநகர காவல் குறுஞ்செய்தி மூலம் 9,211 அழைப்புகள் என மொத்தம் 69,628 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.
இவற்றில், சாலை விபத்துகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான நிகழ்வுகள், திருட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு சம்பவ இடத்துக்கு 5 நிமிஷங்களில் இருந்து போக்குவரத்து சூழலைக் கொண்டு 10 நிமிஷங்களுக்குள்ளாக ரோந்து வாகனங்களில் போலீஸாா் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
சென்னை மாநகராட்சி மற்றும் அரசு துறையினரை இணைத்து பொதுமக்களின் குறைகளை மாநகர காவல் துறை நிவா்த்தி செய்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.