சென்னை: மதியம் அடிதடி; இரவில் கொலை - இளைஞரைக் கொலை செய்த ரௌடியின் பின்னணி
சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மனைவி ஜெயந்தி. ராஜா தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, பாரதியார் தெரு சந்திப்பு பகுதியில் நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் ராஜாவைச் சுற்றி வளைத்து வெட்டினர். அதனால் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் ராஜாவின் கழுத்து கழுத்து, தலை பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ராஜா, உயிருக்குப் போராடினர். அதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆம்புலன்ஸிக்கும் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீஸார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து ராஜாவின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து கொலை வழக்குப்பதிந்த போலீஸார், ராஜாவைக் கொலை செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ராஜாவை பைக்கில் வந்த மூன்று பேர் வெட்டியது பதிவாகியிருந்தது. அதன்அடிப்படையில் கொலையாளிகளை போலீஸார் அடையாளம் கண்டனர். அவர்கள், தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரௌடி மணி என்கிற வாண்டு மணி அவரின் கூட்டாளிகள் வெள்ளை ராகுல், விக்னேஷ் ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் கூறுகையில், ``இந்தக் கொலை வழக்கில் வாண்டு மணி, வெள்ளை ராகுல், விக்னேஷ் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீஸார் பிடித்தனர். இதில் வாண்டு மணி மீது 16 வழக்குகள் உள்ளன. இவர் தேனாம்பேட்டை காவல் நிலைய பி கேட்டகிரி ரௌடியாவார். ரௌடி வாண்டு மணி என்பவர் திருவள்ளூவர் சாலை பிளாட்பாரத்தில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஊறுகாய் விஜய் என்பவர் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று மதியம் ஊறுகாய் விஜய்க்கும் கொலை செய்யப்பட்ட ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த ராஜா, ஊறுகாய் விஜயை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இந்தத் தகவலை ஊறுகாய் விஜய், தன்னுடைய ஓனர் வாண்டு மணியிடம் கூறியிருக்கிறார். அதனால் என்னுடைய ஏரியாவில் வைத்து உன்னை அடித்தது யார் என்று வாண்டு மணி கேட்டதோடு ராஜாவை இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ரௌடி வாண்டு மணி கொலை செய்திருக்கிறார்.இந்த வழக்கில் வாண்டு மணி உள்பட மூன்று பேரைக் கைது செய்துவிட்டோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.