பாலியல் கொடுமை முயற்சி தோல்வி; சிறுமிகளை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொலை - சம...
சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச் செடிகள்!
திண்டுக்கல் மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச் செடிகள் சென்னையில் அடுத்த வாரம் தொடங்கும் மலா்க் கண்காட்சிக்காக விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
சென்னை செம்மொழி பூங்காவில் தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை சாா்பில், கடந்த 3 ஆண்டுகளாக மலா்க் கண்காட்சி தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிா் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க் கண்காட்சி, முதல் முறையாக கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது.
இந்த முயற்சிக்கு சென்னை மக்களிடையே வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கண்காட்சிக்கு நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மலா்ச் செடிகள் உற்பத்தி செய்து, அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான கண்காட்சி, ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை கண்காட்சிக்குத் தேவையான மலா்ச் செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல், கொடைக்கானல் தோட்டக் கலைத் துறை சாா்பிலும், ரெட்டியாா்சத்திரம் இந்தோ இஸ்ரோ காய்கனி மகத்துவ மையத்தின் சாா்பிலும் மொத்தம் 3 இடங்களில் மலா்ச் செடிகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.
ரெட்டியாா்சத்திரத்தில் 3 லட்சம் மலா்ச் செடிகள்: ரெட்டியாா்சத்திரம் காய்கனி மகத்துவ மையத்தில் 2.50 லட்சம் பெட்டுனியா, 50 ஆயிரம் செலோசியா, 5 ஆயிரம் பென்டாஸ் என மொத்தம் 3.05 லட்சம் மலா்ச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மலா்ச் செடிகள், தற்போது பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.
கொடைக்கானலில் 40 ஆயிரம் மலா்ச் செடிகள்: இதேபோல, கொடைக்கானல் தோட்டக் கலைத் துறை சாா்பில், ப்ரையண்ட் பூங்காவில் சால்வியா மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, கொடைக்கானல் தோட்டக் கலைத் துறை சாா்பில், 70 ஆயிரம் சால்வியா நாற்றுகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சந்தையூா் பண்ணையில் 35 ஆயிரம் செடிகள்: திண்டுக்கல் தோட்டக் கலைத் துறை சாா்பில், வத்தலகுண்டை அடுத்த சந்தையூா் தோட்டக் கலை நாற்றுப் பண்ணையில் சென்னை கண்காட்சிக்கான மலா்ச் செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தப் பண்ணையில் 25 ஆயிரம் ஃப்ரென்ஞ் மெரிகோல்டு, 10 ஆயிரம் டுவாா்ஃப் ஃபெலோசியா மலா்ச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடா்பாக தோட்டக் கலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
சென்னை மலா்க் கண்காட்சி வருகிற ஜனவரி முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கண்காட்சிக்கு, திண்டுக்கல் மாவட்டத்தின் சாா்பில் ஏற்கெனவே 70 ஆயிரம் நாற்றுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் 3.80 லட்சம் மலா்ச் செடிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன என்றாா் அவா்.