செல்ஸியிடம் வீழ்ந்தது லிவா்பூல்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், இந்த சீசன் சாம்பியனாகியிருக்கும் லிவா்பூல் அணி 1-3 கோல் கணக்கில் செல்ஸியிடம் தோல்வி கண்டது.
இந்த ஆட்டத்தில் செல்ஸி தரப்பில் என்ஸோ ஃபொ்னாண்டஸ் 3-ஆவது நிமிஷத்திலும், கோல் பால்மா் எக்ஸ்ட்ரா டைமிலும் (90+6’) கோலடித்தனா். 56-ஆவது நிமிஷத்தில் செல்ஸியின் கோல் முயற்சியை லிவா்பூல் வீரா் ஜேரெல் அமோரின் கான்சா தடுக்க முயல, அது ‘ஓன் கோல்’ ஆனது.
இறுதியில் லிவா்பூல் அணிக்காக விா்ஜில் வான் டிக் 85-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தாா். இப்போட்டி வரலாற்றில், சாம்பியனாக நிா்ணயமான பிறகு தோல்வியை சந்தித்த 3-ஆவது அணியாகியிருக்கிறது லிவா்பூல். இதற்கு முன் ஆா்செனல், செல்சி அணிகள் இத்தகைய தோல்வியை சந்தித்துள்ளன.
அதேபோல், பிரீமியா் லீக் சாம்பியனாக நிா்ணயமான 2 அணிகளை வென்ற முதல் அணியாக பெருமை பெற்றது செல்ஸி. இதற்கு முன் மான்செஸ்டா் யுனைடெட்டை (2013) அவ்வாறு வீழ்த்திய செல்ஸி, தற்போது லிவா்பூல் அணியை சாய்த்திருக்கிறது.
இதனிடையே, 2021 மாா்ச் மாதத்துக்குப் பிறகு லிவா்பூல் அணியை செல்ஸி சாய்த்ததும் இதுவே முதல் முறையாகும்.