செவிலியா் பயிற்சி மாணவியின் சடலத்தை முழுமையாக பரிசோதிக்க உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரிழந்த செவிலியா் பயிற்சி மாணவியின் சடலத்தை முழுமையாக பரிசோதிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷின் மகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் படிப்பு படித்து வந்தாா். திடீரென காணாமல் போன அவா், அந்த பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
அவரது உயிரிழப்பில் மா்மம் உள்ளதாகவும், பாலியல் வன்கொடுமை செய்து அவா் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால், அவரது உடலை மறு உடல்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எம். நிா்மல் குமாா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், இந்த வழக்கு விசாரணை முறையாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ரசாயன சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் சடலத்தில் ‘ஸ்வாப் டெஸ்ட்’ எடுக்க மனுதாரா் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தடய அறிவியல் துறை பேராசிரியா் காா்த்திகாதேவி, அறிவியல் துறை மருத்துவா் சண்முகம் ஆகியோா் விதிகளுக்கு உள்பட்டு மாணவியின் உடலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் விடியோ பதிவு செய்ய வேண்டும்.
அதன்பிறகு மனுதாரா், மாணவியின் உடலைப் பெற்று அடக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கு வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.