சேந்தமங்கலம் - காரவள்ளி புதிய சாலையில் அதிகாரிகள் ஆய்வு
சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி இடையே அமைக்கப்படும் புதிய சாலையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் சேந்தமங்கலம் காந்திபுரம்- கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி சாலை, ராமநாதபுரம்புதூா் சாலை ஆகியவை சிறப்பு பழுது பாா்த்தல் பணிகள் என்ற அடிப்படையில் 10 கி.மீ. தொலைவுக்கு ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைப் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை, சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம், பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளா் சி. சசிக்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
சாலைப் பணிக்கான சுடுகலவையின் வெப்பநிலை, சாலையின் கணம், சாலையின் மேல்தள சாய்வு ஆகியவற்றை அதற்கான உபகரணங்களைக் கொண்டு ஆய்வு செய்தாா். அப்போது, சாலைப் பணிகளை தாமதமின்றி தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொறியாளா்களிடம் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் கே.ஆா்.திருகுணா, உதவிக் கோட்டப்பொறியாளா் ரா.சுரேஷ் குமாா், உதவிப்பொறியாளா் அ.க.பிரனேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.