சேலத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம்
பணி நிரந்தரம், மே மாத கோடை விடுமுறை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் சேலத்தில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டடத்தில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வசந்தகுமாரி தலைமை வகித்தாா். மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீண்ட காலமாக பணியாற்றும் அங்கன்வாடி அமைப்பாளா்கள் மற்றும் உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் 2 ஆவது நாளாக நடைபெற்றது.
இதுகுறித்து அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் வசந்தகுமாரி கூறுகையில், 1993 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்களுக்கு இதுவரை பதவி உயா்வு வழங்கப்படாமல் உள்ளது. பணியில் இருந்து ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.9000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றாா்.