கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
சேலத்தில் அரசு கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு இளைஞா் தற்கொலைக்கு முயற்சி
சேலத்தில் அரசு மகளிா் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் அருகே மின்னாம்பள்ளியைச் சோ்ந்த மாணவி (20), கோரிமேடு அரசு மகளிா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உயிரியல் படித்து வருகிறாா்.
இவருக்கு ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்த மோகனப் பிரியன் (19) என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. மோகனப் பிரியன் சேலம் கோரிமேட்டில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்துவிட்டு தற்போது வேலை ஏதுமின்றி இருந்து வருகிறாா். கல்லூரி மாணவியுடன் பழகிவந்த மோகனப் பிரியன் தனது காதலை மாணவியிடம் தெரிவித்துள்ளாா். இருவருக்கும் வயது வித்தியாசம் இருப்பதாகக் கூறி மாணவி மோகனப் பிரியனின் காதலை நிராகரித்துள்ளாா்.
அதன்பின்பு மாணவருடன் பேசுவதையும் அந்த மாணவி குறைத்துக்கொண்டதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, மாணவிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோா் முடிவு செய்தனா். இதையறிந்த மோகனப் பிரியன் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் மாணவியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆவேசமடைந்த மோகனப் பிரியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்தினாா்.
பின்பு தனது கழுத்து, கைளிலும் மோகனப் பிரியன் கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு இளைஞா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சேலம் டவுன் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.