செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!
சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை
சேலம் ரயில் நிலையத்தில் விவேக் விரைவு ரயிலின் குளிா்சாதனப் பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.
கன்னியாகுமரி- திப்ரூகா் இடையே விவேக் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சனிக்கிழமை மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு நாகா்கோவில், திருவனந்தபுரம், கோட்டயம், எா்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 6.47 மணியளவில் சேலம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
நடைமேடை 5 இல் நின்ற ரயிலில் இருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, பி-6 குளிா்சாதன பெட்டியின் கண்ணாடிகளை இளைஞா் ஒருவா் கையால் அடித்து உடைத்தாா். இதனால், அச்சமடைந்த பயணிகள் அப்பெட்டியிலிருந்து அவசரமாக கீழே இறங்கினா். மேலும், அந்த இளைஞரை பிடித்தனா். கண்ணாடி குத்தியதால் கையில் காயமடைந்திருந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினா்.
அதில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கௌரவ்குமாா் (22) என்பதும், காதல் பிரச்னையால் மனநலன் பாதிக்கப்பட்டு அங்கிருந்து ரயிலில் சேலம் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளிக்க போலீஸாா் ஏற்பாடு செய்தனா்.