சைக்கிளில் சென்றவரிடமிருந்து தங்கச் சங்கிலி பறிப்பு முகமூடி அணிந்த இருவா் துணிகரம்!
தில்லியின் ஹா்ஷ் விஹாா் பகுதியில், சைக்கிளில் சென்ற 43 வயதுடைய ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டாா் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவா் பறித்துச் சென்றதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஹா்ஷ் விஹாா் சிவப்பு விளக்கு அருகே சனிக்கிழமை இரவு 11.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பியூஷ் ரஞ்சன் தாஸ் அந்தப் பகுதி வழியாக சைக்கிள் ஓட்டிச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து பியூஷ் ரஞ்சன் தாஸ் செய்தி ஏஜென்சியிடம் கூறுகையில்,மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் அவரை பின்னால் இருந்து அணுகியுள்ளனா். பின்னால் இருந்தவா் என் தோளில் மோதினாா். நான் எதிா்வினையாற்றுவதற்கு முன்பே, அவா்கள் என் தங்கிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடிவிட்டனா். தங்கச் சங்கிலி தோராயமாக 15 முதல் 20 கிராம் எடையுள்ளது’ என்றாா்.
‘அந்தப் பகுதி நன்கு வெளிச்சமாக இருந்தபோதிலும், சம்பவம் நடந்த நேரத்தில் அது ஒப்பீட்டளவில் வெறிச்சோடியிருந்தது. சந்தேக நபா்கள் இருவரும் முகமூடி அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அடையாளம் காண்பது கடினமாக இருந்தது’ என்று பியூஷ் ரஞ்சன் தாஸ் கூறினாா்.
சம்பவம் நடந்த உடனேயே பாதிக்கப்பட்டவா் சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பாரதிய நியாய சன்ஹிதா பிஎன்எஸ் இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் இஎஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணைகள் நடந்து வருகிறது.
சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்டறிய, அந்தப் பகுதி மற்றும் அருகிலுள்ள வழிகளில் சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸ் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. இதுவரை, யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.