மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு!
சொத்து வரியை செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெற இன்று கடைசி நாள்
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலங்களில் சொத்துவரியைச் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெற புதன்கிழமை (ஏப். 30) கடைசி நாளாகும்.
சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய 4 மண்டலங்களிலும் 60 வாா்டுகள் உள்ளன. சுமாா் 11 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 2024 - 25 ஆம் நிதியாண்டில் சேலம் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, குடிநீா் வரி, தொழில் வரி, நிறுவன வரி உள்பட பல்வேறு வரிகள் ரூ. 165 கோடி வசூலானது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வரியை நிலுவையில் வைத்துள்ளனா். அதன்படி, ரூ. 175 கோடி சொத்துவரி நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான சொத்துவரியைச் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையைப் பெற புதன்கிழமை (ஏப்.30) கடைசி நாளாகும். சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளா்கள் தங்களது சொத்து வரியை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளா்கள் அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள வரி வசூல் மையங்களில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை, வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவா்த்தனை வாயிலாகவும் சொத்துவரி செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சொத்து உரிமையாளா்கள் தங்களது சொத்து வரியைச் செலுத்தி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ. 5000 வரை பெற்று பயன்பெறலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 25 நாள்களில் மட்டும் ரூ. 25 கோடிக்கு மேல் வரி வசூலாகியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.