செய்திகள் :

சொல்லப் போனால்... சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற இருமுனையும் கூர்கொண்ட கத்தி!

post image

“காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறிப்பிடும் சமூக – பொருளாதார ஆய்வு மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது தனிநபர் சொத்துரிமைக்கு எதிரானது; மாவோ கருத்தியலின் எதிரொலி. காங்கிரஸை ஆட்சி அமைக்கத் தேர்ந்தெடுத்தால் செல்வத்தைப் பிரித்துத் தருவதற்காக (இதுபோன்ற) ஆய்வுகளை நடத்தும். வீட்டிலுள்ள ஒரு பாத்திரத்துக்குள் யாராவது ஒரு பெண்மணி நகையை ஒளித்துவைத்திருந்தால்கூட அவற்றைக் கண்டுபிடித்து மறுவிநியோகம் செய்துவிடுவார்கள். முற்றிலுமாக இதுவொரு ‘அர்பன் நக்சல்’ (நகர்ப்புற நக்சலிய) மனநிலை” – 2024 மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றித் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த எதிர்வினைதான் இது.

ஆனால், இந்த நேர்காணல் வெளியாகிச் சரியாக ஓராண்டு காலத்திலேயே இந்த நிலைப்பாட்டுக்கு நேர் எதிராக ‘யு டர்ன்’ அடித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு, தற்போது மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரிக் கணக்கையும் எடுப்பது என முடிவு செய்து அறிவித்திருக்கிறது.

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக சில நாள்கள் முன்னர் வரையிலும் மிகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துவந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் ஆதரவாளர்களும் ‘தடக்’கென விழுந்தாலும் மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொருவராக யு டர்ன் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, சமூக ஊடகங்களில் இவர்கள் வெளியிட்டிருந்த காரசாரமான எதிர்ப்புப் பதிவுகளை எல்லாம் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியென வரவேற்கும் காங்கிரஸும் தலைவர்கள் ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேயும், உடனடியாக இதுபற்றிய அறிவிக்கையை வெளியிடுங்கள், நிதி ஒதுக்குங்கள், கால வரையறையை நிர்ணயம் செய்யுங்கள் என்றும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

தொடக்கத்திலிருந்தே சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலையை  காங்கிரஸ் எடுத்து வந்திருக்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான தெலங்கானா, கர்நாடகம் ஆகியவற்றில் கணக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.

2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத இறுதியில் மத்தியப் பிரதேசத்தில் பிற்பட்டோர் அதிகளவில் வசிக்கும் ஷாஜாபூர் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மத்தியில் காங்கிரஸை ஆட்சிக்கு வரச் செய்தால் நாடு தழுவிய அளவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்ற எக்ஸ் ரே, எம்ஆர்ஐ ஸ்கேன் கொண்டு பார்ப்பதால் நாட்டில் அனைத்து மக்களுக்குமான பங்களிப்பு உறுதி செய்யப்படும் என்றார்.

அடுத்த சில நாள்களில், பிகார் சாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட, ராகுல் காந்தியும் வரவேற்றார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ, “இந்த நாட்டைச் சாதியின் அடிப்படையில் பிரிக்க” எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டினார். ஏனெனில், ஹிந்து ஒற்றுமை என்ற பெயரில் மக்கள் ஆதரவைத் திரட்டும் பாஜகவின் முதன்மையான உத்தி, சாதிகளின் அடிப்படையில் பிளவுற்றுப் போய்விடலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். ஆக, நான்கு நாள்களுக்கு முன் வரையிலும்கூட இவ்விஷயத்தில் உறுதியாகவே இருந்தது பாரதிய ஜனதா.

நேர் எதிரான நிலை எடுத்த இந்த திடீர் முடிவுக்கு என்னென்ன காரணங்களாக  இருக்கலாம்? பிகாரிலும் மேலும் சில வட மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரவிருக்கின்றன; சாதிவாரிக் கணக்கெடுப்பை காங்கிரஸ் உயர்த்திப் பிடித்தால் தங்கள் ஆதரவில் சேதாரம் ஏற்படும்; தோல்வியைச் சந்திக்க நேரிடலாம் என நினைத்திருக்கலாம். இன்னொன்று, ஊரெல்லாம் பஹல்காம் தாக்குதல், பாதுகாப்புக் குறைபாடு, பாகிஸ்தான் சண்டை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள், பேச்சை மடை மாற்றி விடலாம் என்றும்  கருதியிருக்கலாம். எல்லாமே ...கலாம், ...கலாம்தான். உண்மை என்னவென சம்பந்தப்பட்டவர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கும்.

உடனடியாக அறிவித்து, தேவையான நிதியை ஒதுக்கினாலும்கூட சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்கக் குறைந்தபட்சம் ஓராண்டாகிவிடும். இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற வெடிகுண்டு அல்லது அணுகுண்டுக்கு நெடிய வரலாறு இருக்கிறது; குண்டுதான், எப்படி வேண்டுமானாலும் வெடிக்கலாம்; என்ன வேண்டுமானாலும் விளையலாம்!

நாட்டின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1872-ல் தொடங்கியது. முழுமை பெற்றதாகத் தெரியவில்லை. பத்தாண்டுக்கு ஒரு முறை என்ற திட்டத்தில் 1881 ஆம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து பத்தாண்டுகளுக்கு ஒரு முறை என 1931 ஆம் ஆண்டு வரையிலும்  சாதிகளையும் உள்ளடக்கிய கணக்கெடுப்புகள் தொடர்ந்தன. 1941 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு இரண்டாம் உலகப் போர், நிதிப் பிரச்சினை காரணமாக முழுமையாக நடைபெறவில்லை; சாதிகள் பற்றிய முழு விவரங்களும் இல்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, கடைசியாக சாதி கணக்கிடப்பட்ட 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்குதான் நம் நாட்டின் சாதிகளுக்கும் கணக்கு. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் அப்போது இருந்திருக்கின்றன. நூற்றாண்டு கொண்டாடப் போகும் இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் இன்னமும் சாதிகள் பற்றிய மேற்கோள்கள் காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன; முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

2010-ல் மத்தியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான  அரசு, இந்த நீண்ட காலப் பிரச்சினை அல்லது தேவையை மனதில்கொண்டு, தனியாக சமூக - பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.  மத்திய சமூக நீதித் துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் இதன் முடிவுகளில் தவறுகள் இருப்பதாகத் தெரிவித்து சாதிகள் தொடர்பான விவரங்களை அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு வெளியிடவேயில்லை.

1979 ஆம் ஆண்டில் நாட்டில் சமூகரீதியிலும் கல்விரீதியிலும்  பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காண்பதற்காக அமைக்கப்பட்ட பி.பி. மண்டல் கமிஷன், 1931 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டுதான் நாட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் - 52.4 சதவிகிதம், பிராமணர்கள், ராஜபுத்திரர்கள் உள்பட உயர் சாதியினர் - 17.6 சதவிகிதம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் - 22.6 சதவிகிதம், முஸ்லிம்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர் – 16.2 சதவிகிதம் என நிர்ணயித்துக் கொண்டது; இன்னமும் அவ்வாறே கருதப்படுகிறது!

[1980 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரை, பத்தாண்டுகளுக்குப் பிறகு, வி.பி. சிங் பிரதமரானபோதுதான், 1990-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது (அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 27 சதவிகிதம்). ஆனால், இதற்கே எதிர்ப்புத் தெரிவித்துப் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன].

சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்திப் பேசியபோது, 44 லட்சம் கோடி ரூபாய் மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணியிலுள்ள 90 செயலர்களில் வெறும் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள், அவர்களும் முக்கியத்துவம் இல்லாத துறைகளைக் கையாள்கின்றனர். இவ்வளவுதானா, பிற்படுத்தப்பட்டோர் மக்கள்தொகை? இவ்வளவுதானா அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம்? அதிக  மக்கள்தொகையினருக்கு அதிக அதிகாரங்கள் என்பதுதான் எங்கள் இலக்கு என்று அறிவித்தார் ராகுல் காந்தி.

இதைப் போன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டு, அல்லது ஊடக செய்திகளின்வழி அரசு, அரசு நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் பதவியில் - பணியில் இருக்கும் உயர் சாதியினர், பிற சாதியினர் பற்றிய ‘அதிர்ச்சித் தரவுகள்’ அவ்வப்போது வெளியாகி சமூக ஊடகங்களின்வழி பரவும்.

இத்தகைய சூழ்நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு முறைப்படி நடத்தப்பட்டு முடிவுகள் வெளிவரும்போது, அரசியல், அரசு நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் என அனைத்திலும் தங்களுக்கு உரிய  பங்கை வழங்க வேண்டுமென ஒவ்வொரு சாதியினரும் உயர்த்திப் பிடிக்க வழிவகையேற்படும்; இட ஒதுக்கீடுகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட வேண்டியிருக்கும்; இட ஒதுக்கீட்டில் உச்சவரம்பு என்ற வரன்முறைகள் எல்லாமும் - உண்மை நிலவரத்தை ஏற்றுக்கொண்டு - நிராகரிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும். அனைவருக்கும் அனைத்தும் மக்கள்தொகையின் அடிப்படையில் என்ற தவிர்க்க முடியாத சூழல் உருவாகும்.

இந்தியாவைப் பொருத்தவரை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுத்தாலும், சாதி இல்லாமல் எதுவுமில்லை, அரசியல் உள்பட. திருமணம், குடும்ப அமைப்புகள் போன்ற இந்தியப் பாரம்பரியம் அவற்றை இன்னமும் இறுக்கமாக வைத்திருக்கின்றன.

பொருளாதாரரீதியில் முன்னேறியபோதிலும்கூட சாதி மறுப்புத் திருமணங்கள் இன்னமும் குறைவாகவே இருக்கின்றன. அப்படியே மணம்புரிந்துகொண்டாலும் அவர்கள் ஏதேனும் ஒரு சாதிக்குள் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்; விட நேரிடுகிறது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னரே நிறைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு அல்லது தீர்மானித்துக் கொண்டுவிடுவது மட்டுமே எதிர்காலத்தில் அதன் தரவுகளைக் கொண்டு நடைமுறைப்படுத்துவதைச்  சாத்தியமாக்கும், எந்த அரசாக இருந்தாலும்.

எக்குத்தப்பான இடியாப்பச் சிக்கல், இந்தியாவிலுள்ள சாதிகளின் எண்ணிக்கையும் அவற்றின் பிரிவுகளும். கணக்கெடுப்புக் கேள்வித் தயாரிப்பிலேயே சாதிகள் – சாதிப் பிரிவுகள் தொடர்பான தெளிவு - வரையறை மிகவும் அவசியம், முக்கியம்.

சாதிகள் எந்த வகையில் கணக்கிடப்படவுள்ளன? எந்தெந்த சாதிகள் எவ்வாறு பட்டியலிடப்படவுள்ளன?  எந்தெந்த உள்பிரிவுகள் எந்தெந்த சாதிகளில் இடம் பெறுகின்றன? என்பதெல்லாமும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு, அல்லது மக்கள் கருத்தறிந்து அறிவித்துவிடுவது நல்லது; சாதிகள், பிரிவுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுப்பது சாத்தியமா? எந்த அளவுக்கு?

ஒரு சாதிக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர்கள். தமிழ்நாட்டில் கோனார்கள் என்றால் வட மாநிலங்களில் யாதவர்கள். அதேபோல வணிக சாதிகளிலும் எத்தனையோ பெயர்கள். எல்லாமும் ஒன்றாக வருமா? அல்லது வேறு வேறா? அல்லாமல் சாதி இல்லை என்பவர்களுக்கும் இடம் வேண்டும்.

தமிழ்நாட்டிலேயே சாதிகளுக்கு எத்தனைவிதமான பெயர்கள். ஒரே சாதியிலேயே வெவ்வேறு பெயர்கள் (பட்டங்கள்!). யாரை யாருடன் சேர்ப்பது? சேர்ப்பதா, கூடாதா? சேர்ந்திருப்பார்களா? மாட்டார்களா? எத்தனை விதமான முதலியார்கள்? இந்தப் பிரச்சினையும் சிக்கலும் பெரும்பாலான சாதிகளுக்கும் பொருந்தக் கூடியனவே (சாதியினர் எண்ணிக்கையைத் தொகுக்க ஒரு சந்தர்ப்பத்தில் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் முற்பட்டபோது, ஒவ்வொரு சாதியினரும் சொன்ன எண்ணிக்கையைக் கூட்டினால், தமிழ்நாட்டின் மக்கள்தொகை 50 கோடிப் பக்கம் வந்ததாம்! எம்ஜிஆரே அசந்துபோய்விட்டாராம், சொல்வார்கள்).

நாட்டில் ஏறத்தாழ நூறு ஆண்டு கழித்து சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளப் போகிறார்கள். எதிர்காலத்தில் திட்டங்கள் யாவும் இந்தத் தரவுகளின் அடிப்படையில் என்கிறபோது, தரவுகளே உருப்படியாக இல்லாமல் இருந்துவிட்டால்...

முறையாக எடுத்தால் மக்கள்தொகையில் சாதியினர் எண்ணிக்கை, கல்வி, வேலை, சமூக, பொருளாதார நிலைமை எல்லாமும் துல்லியமாகத் தெரிய வரும். தொடர்ச்சியாக, பெரிய அளவில் குமுறல்களும் எழ நேரிடும். உடனடி விளைவு இட ஒதுக்கீட்டில்தான் எதிரொலிக்கும்; நிச்சயம் மாற்றியமைக்க வேண்டி வரும்.

சாதிவாரிக் கணக்கெடுப்பின் முடிவுகளை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்பதில் எல்லா அரசியல் கட்சிகளுக்குமே தெளிந்த அக்கறை அவசியம். ஏனெனில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. சாதி அடிப்படையில் கூட்டணி, சாதி அடிப்படையில் வாக்குறுதி என்றெல்லாமும் அரசியலுக்குள் நுழையக் கூடிய ஆபத்து இருக்கிறது. சாதிகளின் அடிப்படையில் தலைவர்கள் தோன்றலாம் அல்லது செல்வாக்குப் பெறலாம். அப்படியானால் எண்ணிக்கையில் குறைந்த சிறிய சாதிக்காரர்களுக்கு எத்தகைய இடம் இருக்கும்?

எண்ணிக்கையைப் பொருத்துக் கல்வி, வேலைவாய்ப்புகளில் கூடுதல் இடங்கள் வழங்கப்படும் அதேவேளையில், சாதிகளின் பேரால் மக்கள் பிரியவும்  மோதிக்கொள்ளவும் நேரிடலாம். குறைந்த எண்ணிக்கை கொண்ட சாதிகள் புறக்கணிக்கவும் படலாம்.

2021 ஆம் ஆண்டு எடுத்திருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புதான் இனிமேல் சாதிவாரியாகச் சேர்த்து எடுக்கப்படவிருப்பது. இப்போது 27 சதவிகிதத்துக்கே போராடும் நிலையில், கணக்கெடுப்பில் பிகாரைப் போல, கூடுதல் மக்கள்தொகை அறியப்பட்டால் தங்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று நாடு தழுவிய அளவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டோரும் மற்றவர்களும் உரத்துக் குரல் எழுப்பும் நிலை உருவாகும்.

நாடு தழுவிய சாதிவாரிக் கணக்கெடுப்பின் முடிவில் இதுவரையில்  கூறப்பட்டுவந்த தரவுகள் எல்லாம் தலைகீழாக மாறும்போது, மக்கள் வாழ்விலும் சமுதாயத்திலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்; நாட்டின் அரசியலிலும்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டின் சித்திரமேகூட மாறிவிடும். இதுவரை புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாரும் மேலெழுந்து வருவார்கள். கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் வரையறைகளை எல்லாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

(உருவாக்கும்தான். ஆனால், இன்னொரு பக்கம், மத்திய அரசு அறிவித்தபடி சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுமா? எப்போது நடைபெறும்? நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஏனெனில், 2021-ல் நடந்திருக்க வேண்டிய வெறும் கணக்கெடுப்பே ஐந்தாண்டுகள் தாமதமாகிவிட்டது. இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக இதுவரையிலும் வேறு எதுவும் கூறப்படவில்லை. நேற்று வரை ஒதுக்கிவைத்திருந்த சாதிவாரிக் கணக்கெடுப்புப் பிரச்சினையை எதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இப்போது திடீரெனத் தோளில்தூக்கிப் போட்டுக்கொள்கிறது? வருகிற சட்டப்பேரவைத் தேர்தல்கள் மட்டுமின்றி அடுத்த மக்களவைத் தேர்தல் வரையிலும்கூட காங்கிரஸும் ராகுல் காந்தியும் இதுபற்றிப் பேசுவதை, பிரசாரம் செய்வதைத் தடுப்பதற்காக, எதிர்த்தரப்பு வைத்திருந்த வலுவான ஆயுதத்தையே பறித்து பாரதிய ஜனதா தம்வசமாக்கிக் கொண்டுவிட்டதா? கடைசி வரை வெறுமனே பேசிக்கொண்டு மட்டுமே  இருப்பார்களா?  சாதிவாரிக் கணக்கெடுப்புக்கே திருதராஷ்டிர ஆலிங்கனமா? இப்படி அறிவிப்புக்குப் பின்னால் விடை தெரியாத நிறைய கேள்விகளும் இருக்கின்றன).

எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கச் செய்ய சாதிவாரிக் கணக்கெடுப்பு வந்துதான்  செய்ய வேண்டுமென்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உறுதிப்பாடு இருந்தால் போதுமானது, செய்திருக்கலாம். ஆனால், அப்படியெதுவும் இல்லாததால்தானே இத்தனையும்.

இவ்வளவு இருக்க, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பே வேண்டாமோ? என்றால், தவறு. கண்டிப்பாக வேண்டும். நூறாண்டு அறுதப் பழசான இற்றுப்  போன தரவுகளையே இன்னமும் வைத்துக்கொண்டு, நூற்றைம்பது கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திப்பதும் நடத்திச் செல்வதும் பெரும் அவக்கேடு என்றால் மிகையில்லை.

என்ன, எல்லாமும் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாரோ ஒருசில பிரிவினருக்கென குற்றம்சாட்டப்படுவதைப் போல அல்லாமல், ஒட்டுமொத்த வெகுமக்களின் மேம்பாட்டுக்கான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாக – மக்கள் சமுதாயத்தை முன்னோக்கி அழைத்துச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும். உருவாக்கும்போது மிக எச்சரிக்கையாகவும் பயன்படுத்தும்போது அதி கவனமாகவும் இருக்க வேண்டும், ஏனென்றால் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது இருமுனையும் கூர்கொண்ட கத்தி!

இதையும் படிக்க.. சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

பைன் மரக் காடுகளுக்கு நடுவிலான பெரும் புல்வெளி. திடீரென மரங்களுக்குப் பின்னிருந்து சீருடையணிந்த அடையாளந் தெரியாத சிலர் துப்பாக்கியேந்தியபடி வெளியே வருகின்றனர். திரண்டிருந்த மக்களை நோக்கிச் சுடுகின்றனர... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... கூட்டணிக் கட்சி பரிதாபங்கள்!

கூட்டணியா? கூடவே கூடாது... முடியவே முடியாது... நாங்கள்ளாம் யாரு?... இவிங்களோட கூட்டணி சேர்ந்து எங்களுக்கு ஆகப் போவது என்னங்க? அதெல்லாம் சரியா வராதுங்க... நாங்க இல்லாம, போன தேர்தல்ல என்ன நடந்துச்சு பார... மேலும் பார்க்க

வரிவிதிப்புகள்! டிரம்ப்பின் இடிமுழக்கமும் உலகின் பெருங் கலக்கமும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உலக நாடுகள் மீதான வரி விதிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகளின் பங்குச் சந்தைகள் நிலைகுலைந்திருக்கின்றன; கடும் வீழ்ச்சியைச் சந்தித்துக் க... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?

செய்திகளில் கடந்த சில நாள்களாக இடம்பெற்றுக்கொண்டிருந்த சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மருத்துவம் - ஊரக நலப் பணிகள் இயக்ககத்துக்கு அனுப்... மேலும் பார்க்க