சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
ஜம்மு- காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்ட சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் சோனாமார்க்கில் உள்ள நீல்க்ராட் பகுதிக்கு வந்தார். அங்கிருந்து குதிரைப்படை மூலமாக சோனாமார்க் சுரங்கப்பாதைக்குச் சென்றார்.
ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் ககாங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் சுமார் ரூ.2,700 கோடியில் இஸட் வடிவில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது அனைவரும் ரசிக்கக்கூடிய சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுரங்கப்பாதையைத் திறந்து வைத்த பிரதமர் மோடி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடினார். இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரவைத் தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாகப் பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீருக்கு மேற்கொண்ட பயணம் இதுவாகும்.
கந்தெர்பால் மாவட்டத்தில் ககாங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 6.5 கிலோமீட்டர் தூரத்துக்கு இருவழிப்பாதையாக இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 8,650 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதை, நிலச்சரிவுகள் மற்றும் பனிச்சரிவுகள் பாதிக்கக்கூடிய பாதைகளைத் தவிர்த்து, ஸ்ரீநகருக்கும் சோனாமார்க்கிற்கும் இடையே லே செல்லும் வழியில் உருவாக்கப்பட்டுள்ளது.