சோனியா, ராகுலுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நீதி ஆயோக் கூட்டம் மே 24-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது.
நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.
முந்தைய ஆண்டுகளில் நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், இந்தாண்டு கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்துக்கு தேவையான நிதி குறித்து முறையிடப் போவதாக ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் தில்லி சென்ற முதல்வர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். தில்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது.
நீதி ஆயோக் கூட்டத்தின் இடையே பிரதமர் மோடியை சந்திக்கவும் முதல்வர் நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.