சோழவந்தானில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 102 போ் கைது
அரசியல் சட்டமேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரை சோழவந்தானில் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 102 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மதுரை புகா் (மேற்கு) மாவட்டச் செயலா் சிந்தனை வளவன் தலைமை வகித்தாா். மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள் அவா்களைத் தடுத்து நிறுத்தி, போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தினா். ஆனால், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், 12 பெண்கள் உள்பட 102 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, மதுரை யா. ஒத்தக்கடையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை கோரிப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் எம்.ஏ. சீனி அகமது தலைமை வகித்தாா். செயலா் கே. அப்பாஸ், மாவட்டப் பொருளாளா் எ. ஷேக்அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலா் எம். முஸ்தபா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.
மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அரசியல் சட்டமேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினா் திரளானோா் கலந்து கொண்டனா்.
மேலூா்: மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, மேலூா் வட்டார விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மேலூா் பேருந்து நிலையம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு கட்சியின் மேலூா் மண்டலத் தலைவா் அய்யாவு தலைமை வகித்தாா். மதுரை மாவட்டச் செயலா் அரசமுத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
பின்னா், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, ஊா்வலமாகச் சென்று மேலூரிலுள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன் மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் நகரச் செயலா் துரை, மாநிலச் செயலா் சந்திரமோகன், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.